பூந்தமல்லி
சென்னை விருகம்பாக்கம், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மகன் நவீன்குமார்(வயது12). இவன், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான். நேற்றுமுன்தினம் காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற நவீன்குமார், அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
பல்வேறு இடங்களில் தேடியும் மகனை காணாததால் அதிர்ச்சி அடைந்த மூர்த்தி, தனது மகனை காணவில்லை என விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், மாயமான நவீன்குமாரின் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர்கள், தாங்கள் அனைவரும் ஒன்றாக போரூர் ஏரியில் குளிக்கச் சென்றதாகவும், அங்கு குளித்து கொண்டிருந்த போது நவீன்குமார் நீரில் மூழ்கி விட்டதாகவும், தேடிப்பார்த்தும் அவன் கிடைக்காததால் யாரிடமும் சொல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார், போரூர் ஏரிக்கு சென்று பார்த்தனர். அங்கு நவீன்குமாரின் உடல் ஏரியில் மிதந்து கொண்டு இருந்தது. நண்பர்களுடன் போரூர் ஏரியில் குளித்த போது நீரில் மூழ்கிய நவீன்குமார், மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்து விட்டது தெரிந்தது.
இதையடுத்து அவனது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.