ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது கடந்த 19ந்தேதி மதியம் பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக காரைக்காலுக்கு சென்ற பயணிகள் ரெயிலை ஒரு தரப்பினர் மறித்து சிறைபிடித்து, ரெயில் என்ஜின், பெட்டியின் மேற்கூரை மீது ஏறி தொடர் போராட்டம் நடத்தினர்.
5 நாட்களுக்கு பிறகு அந்த ரெயில் மீட்கப்பட்டு பாதுகாப்புடன் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அந்த ரெயிலை ஆய்வு செய்ததில் ரெயில் என்ஜின், ரெயில் பெட்டிகளின் கண்ணாடி உடைப்பு, இருக்கைகள் கிழிப்பு என சுமார் ரூ.68 லட்சத்திற்கு மேல் பொருட்கள் சேதம் ஆகியிருப்பது கணக்கிடப்பட்டது.
இதற்கிடையே, சிறைபிடிக்கப்பட்ட பெங்களூருகாரைக்கால் ரெயில் என்ஜின் டேஞ்சர் லைட் மற்றும் ரெயில் பெட்டிக்குள் இருந்த மின்விசிறி, வாஷ்பேஷின் உள்ளிட்ட பொருட்கள் திருட்டுப் போனது தெரியவந்தது.
ரெயிலில் பொருட்களை திருடியதாக சேலம் குகை தொல்காப்பியர் தெருவை சேர்ந்த பிரகாஷ் (வயது 50), 3 ரோடு ஜவஹர் மில் பகுதியை சேர்ந்த ராகவன் (30) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து பொருட்களும் மீட்கப்பட்டது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள பாபு என்பவரை ரெயில்வே போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.