மாவட்ட செய்திகள்

காட்டு யானை தந்தத்தால் குத்தி துப்புரவு பணியாளர் பலி

மேட்டுப்பாளையம் அருகே காட்டுயானை தந்தத்தால் குத்தி, தூக்கி வீசியதில் துப்புரவு பணியாளர் பலியானார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த ஊமப்பாளையம் கீழ் தெருவை சேர்ந்தவர் பத்திரன் (வயது 55). இவர் ஓடந்துறை ஊராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி நஞ்சம்மாள் (47). இவர்களுக்கு புவனேஸ்வரி(30), சத்யா (27) ஆகிய 2 மகள்களும், முருகேசன் (25) என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.45 மணிக்கு சிற்றுண்டி வாங்குவதற்காக பத்திரன் ஓடந்துறைக்கு சென்றார். அந்த சமயத்தில் ஊமப்பாளையம் கிராமத்திற்குள் ஓடந்துறை வனப்பகுதியில் இருந்து வந்த காட்டுயானை ஒன்று புகுந்தது. இதையடுத்து காட்டுயானையை விரட்டும் முயற்சியில் அப்பகுதி பொதுமக்கள் ஈடுபட்டனர். அங்கிருந்து மிரண்டு ஓடிய யானை, மேட்டுப்பாளையம் ஊமப்பாளையம் ரோட்டிற்கு வந்தது.

இது தெரியாமல் அந்த ரோட்டில் உள்ள முனியப்பன் கோவில் அருகே இரவு 10.30 மணிக்கு பத்திரன் நடந்து வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது ரோட்டில் நின்ற காட்டுயானையை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்து, ரோட்டோரத்தில் இருந்து வேலியில் பதுங்கி கொண்டார். பின்னர் உயிரை கையில் பிடித்து கொண்டு இருந்த அவர், யானை சென்றிருக்கும் என எண்ணி வேலியை விட்டு வெளியே வந்தார்.

அப்போது அருகில் நின்றிருந்த காட்டுயானை, திடீரென்று பத்திரனை தந்தத்தால் குத்தி தூக்கி வீசிவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது. யானை தூக்கி வீசியதால் அவர் அலறி துடித்தார். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து படுகாயம் அடைந்த அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பத்திரன் பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோகரன் சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து காட்டுயானை தாக்கி உயிரிழந்த பத்திரனின் மனைவி நஞ்சம்மாளிடம் தமிழக அரசின் நிவாரண தொகையில் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரத்தை வழங்கினார். இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.