மாவட்ட செய்திகள்

மந்திரிசபை மாற்றம் தொடர்பாக பரமேஸ்வருடன், முதல்–மந்திரி ரகசிய ஆலோசனை

மந்திரிசபை மாற்றம் தொடர்பாக பரமேஸ்வருடன், முதல்–மந்திரி சித்தராமையா நேற்று ரகசிய ஆலோசனை நடத்தினார்.

பெங்களூரு,

மந்திரிசபை மாற்றம் தொடர்பாக பரமேஸ்வருடன், முதல்மந்திரி சித்தராமையா நேற்று ரகசிய ஆலோசனை நடத்தினார்.

பெங்களூருவில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல்கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் தொடக்க விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார். இந்த விழாவுக்கு பின்னர் அவர் ராஜ்பவனில் தங்கினார். நேற்று காலையில் எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து அவர் உடுப்பி மாவட்டத்துக்கு புறப்பட்டு சென்றார். பிரணாப் முகர்ஜியை முதல்மந்திரி சித்தராமையா வழியனுப்பி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, முதல்மந்திரி சித்தராமையாவும், மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரும் ரகசியமாக சந்தித்தனர். இந்த சந்திப்புக்காக அவர்கள் தங்களது பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் அதிகாரிகளை திரும்ப அனுப்பினர்.

இந்த சந்திப்பின்போது மந்திரிசபை மாற்றம் பற்றி விரிவான ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மந்திரிசபையில் உள்ள 10 மந்திரிகளை நீக்கிவிட்டு அவர்களுக்கு கட்சி பொறுப்புகள் வழங்கவும் சித்தராமையா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிய மந்திரிகளாக யாரை தேர்ந்தெடுப்பது என்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

மேலும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கும் தயாராகும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மந்திரியை தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்ய ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.