பெரம்பலூர்:
அரியலூர்-ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலை சடைபடையாட்சி தெருவை சேர்ந்தவர் மனோகரன் (வயது 55). இவர் நேற்று முன்தினம் காலை பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலத்தில் வசிக்கும் தனது மகளை பார்ப்பதற்காக மொபட்டில் தனது மனைவி ஈஸ்வரியை (45) அழைத்து கொண்டு புறப்பட்டார். அரியலூர்-பெரம்பலூர் நெடுஞ்சாலையில் கவுல்பாளையம் பிரிவு ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே கவுல்பாளையம் குடிசை மாற்று வாரியத்தை சேர்ந்த குமாரின் மனைவி மாலதி (30) ஸ்கூட்டரில் வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மாலதி ஓட்டி வந்த ஸ்கூட்டர், மனோகரனின் மொபட் மீது மோதியது. இதில் மனோகரன், ஈஸ்வரி, மாலதி ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். இதனை கண்டவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஈஸ்வரி நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.