வடகாடு,
வடகாடு அருகே உள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனை ரத்து செய்ய வலியுறுத்தி நெடுவாசல் பொதுமக்கள் கடந்த மாதம் 12-ந் தேதி 2-வது கட்டமாக போராட்டத்தை தொடங்கினர். அதில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று நெடுவாசலில் 68-வது நாளாக போராட்டம் நடைபெற்றது.
கும்மியடித்து போராட்டம்
இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கும்மியடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. மெய்யநாதன் கலந்துகொண்டார். மேலும், வெளிமாவட்டங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
பேட்டி
இதையடுத்து போராட்டத்தில் கலந்து கொண்ட ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. மெய்யநாதன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய, மாநில அரசுகள் போராடிக்கொண்டிருக்கும் மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று உடனடியாக இத்திட்டத்தை ரத்து செய்யவேண்டும். தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மத்திய அரசை வலியுறுத்தி இந்த நெடுவாசல் விவசாயிகளை பாதுகாக்கின்ற வகையில் இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றம் கூடிய முதல்நாளே நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொடுத்துள்ளார்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன்
அந்த தீர்மானத்தை விரைவிலேயே விவாதித்து, நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்ற அரசை வலியுறுத்துவோம். அவ்வாறு கொண்டு வராதபட்சத்தில் மு.க. ஸ்டாலின், அடுத்தகட்ட முடிவை அறிவிப்பார். மேலும், இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்யும் வரை மக்களோடு இணைந்து தொடர்ந்துபோராட் டத்தில் ஈடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.