மாவட்ட செய்திகள்

கோவை இஎஸ்ஐ ஆஸ்பத்திரியில் கூடுதலாக 200 படுக்கை வசதி அமைக்கும் பணி

கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கூடுதலாக 200 படுக்கை வசதி அமைக்கும் பணி நடந்து வபத்திரியில் ருகிறது.

கோவை

கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கூடுதலாக 200 படுக்கை வசதி அமைக்கும் பணி நடந்து வருகிறது.

கொரோனா பரவல்

கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதுவரை ஒரு லட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

அதேசமயம் இரண்டாவது அலையின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.

கடந்த 10 நாட்களில் மட்டும் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பால், கோவையில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

படுக்கைகளுக்கு தட்டுப்பாடு

மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படு வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் அனைத்தும் நிரம்பிய நிலையிலேயே உள்ளன.

இதன் காரணமாக புதிதாக வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தாமதமாவதால், கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த சுகாதாரத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் திட்டமிட்டு உள்ளனர்.

இது குறித்து இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரியின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ரவிக்குமார் கூறியதாவது:-

கூடுதலாக 200 படுக்கை வசதி

"இ.எஸ்.ஐ அரசு ஆஸ்பத்திரியில் உள்ள 11 கே.எல். கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் டேங்கில் இருந்து 88 லட்சம் லிட்டர் ஆக்சிஜன் நோயாளிகளுக்கு தங்கு தடையில்லாமல் வழங்கப்படுகிறது.

மருத்துவமனை வளாகத்தில் நிமிடத்துக்கு 100 லிட்டர் ஆக்சிஜன் சப்ளை செய்யும் கருவிகள் உட்பட பல்வேறு கருவிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

830 படுக்கை வசதிகள் உள்ள நிலையில் 407 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 830 படுக்கைகள் ஏற்கனவே உள்ள நிலையில் 200 படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்பட்டு, 1030 படுக்கை வசதிகளாக விரைவில் தரம் உயர்த்தப்பட உள்ளது.

ஆக்சிஜன் ஜெனரேட்டர் கருவி

இந்த வார இறுதிக்குள் ஆக்சிஜன் ஜெனரேட்டர் கருவிகள் பொருத்தப் பட்டு, அனைத்துப் படுக்கைகளும் ஆக்சிஜன் படுக்கைகளாக மாற்றப் பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ரவீந்திரன் மற்றும் மாவட்ட கலெக்டர் நாகராஜன் மேற்பார்வையில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.