மாவட்ட செய்திகள்

தேனி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

தேனி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பரிதாபமாக இறந்துபோனார்.

தேனி:

போடி மேலத்தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகன் விக்னேஷ் (வயது 21). இவர் தேனி அருகே பத்ரகாளிபுரத்தில் உள்ள ஹாலோ பிளாக் கற்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் அங்கு வழக்கம்போல் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது ஹாலோபிளாக் கற்கள் தயாரிக்கும் எந்திரத்தில் மின்கசிவு இருந்தது. இதை அறியாத விக்னேஷ் அந்த எந்திரத்தை தொட்டுள்ளார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து, தூக்கி வீசப்பட்டார். இதைத்தொடர்ந்து அங்கு இருந்த தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், விக்னேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.