மாவட்ட செய்திகள்

சூளகிரி அருகே லாரி மீது பஸ் மோதி 16 தொழிலாளர்கள் காயம்

சூளகிரி அருகே லாரி மீது பஸ் மோதி 16 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.

சூளகிரி:

சூளகிரி அருகே லாரி மீது பஸ் மோதி 16 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.

லாரி மீது பஸ் மோதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கொல்லப்பள்ளி என்ற இடத்தில் தனியார் கார்மென்ட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஆண், பெண் தொழிலாளர்களை நேற்று ஓசூரில் இருந்து ஏற்றிக்கொண்டு நிறுவனத்திற்கு பஸ் கொல்லப்பள்ளி நோக்கி சென்றது. இதில் 19 பெண்கள் உள்பட 39 பேர் இருந்தனர்.

இந்த பஸ்சை, சூளகிரி அருகே முரசுப்பட்டியை சேர்ந்த திம்மராஜ் (வயது32) என்பவர் ஓட்டிச்சென்றார். சூளகிரி அருகே கோபசந்திரம் அருகே சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியின் பின்புறம் அந்த பஸ் மோதியது. இந்த விபத்தில் 1 ஆண் தொழிலாளி மற்றும் 15 பெண் தொழிலாளர்கள் என மொத்தம் 16 பேர் காயம் அடைந்தனர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இவர்களில் 10 பேர் சூளகிரி ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 6 பேர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலாளர்களை ஏற்றி சென்ற பஸ் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.