களக்காடு:
களக்காடு கோவில்பத்து, சிதம்பரபுரம், பத்மநேரி, நெடுவிளை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய தோட்டங்களில் வாழைத்தார்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட 13 விவசாயிகள் களக்காடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் புலவன்குடியிருப்பை சேர்ந்த வேல்முத்துக்குமார் மகன் ஜோதிமுத்து (வயது 20) என்பவர் வாழைத்தார்களை தொடர்ந்து திருடி வந்தது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் ஜோதிமுத்து நேற்று திருடிய வாழைத்தார்களை ஒரு லோடு ஆட்டோவில் ஏற்றி ஏர்வாடி அருகே உள்ள சிறுமளஞ்சி சந்தையில் விற்பனை செய்ய கொண்டு சென்றார். அப்போது அங்குள்ள வியாபாரிகள், ஜோதி முத்துவை பிடித்து களக்காடு போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார், அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 93 வாழைத்தார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.