ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறைக்கு அரசியல் கட்சிகள் மீது பழிபோடுவது அபாண்டமானது திருமாவளவன் பேட்டி

நாமக்கல், ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து நடந்த வன்முறைக்கு அரசியல் கட்சிகள் மீது பழிபோடுவது அபாண்டமானது என நாமக்கல்லில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.
ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறைக்கு அரசியல் கட்சிகள் மீது பழிபோடுவது அபாண்டமானது திருமாவளவன் பேட்டி
Published on

திருமாவளவன் பேட்டி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜல்லிக்கட்டு தொடர்பான மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் காவல்துறையினர் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியது வன்மையான கண்டனத்திற்கு உரியது. மீனவர் குப்பங்களிலும், தலித் மக்கள் குடியிருக்கும் பகுதிகளிலும் போலீசார் தடியடி, கண்ணீர்புகை குண்டு வீச்சு போன்ற செயல்களில் நேரடியாகவே ஈடுபட்டு உள்ளனர். காவல் துறையினரின் திட்டமிட்ட இந்த வன்முறை வெறியாட்டத்தை கண்டித்து வருகிற 28-ந் தேதி சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் மக்கள் நலக்கூட்டு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் பாதுகாப்பானதா? இல்லையா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டிய பொறு ப்பு அரசுக்கு உள்ளது. ஆனால் 7 நாட்கள் வரை போராட்டத்தை அனுமதித்தவர்கள் அவசர சட்டம் கொண்டுவந்த ஒரு சில மணி நேரத்திலேயே, அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என்ற ஆதிக்கத்தை நிலை நாட்டப்பார்த்தது தான் இந்த வன்முறைக்கு காரணம்.

பிப்ரவரி 2-ந் தேதி ஆர்ப்பாட்டம்

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை பாதுகாத்திடும் வகையில் மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சமயத்தில் பல்வேறு இடங்களில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த சாதிய வன்கொடுமை தாக்குதல்களை கண்டித்து வருகிற பிப்ரவரி மாதம் 2-ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அரியலூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.

ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் பங்கேற்ற இளைஞர்கள், மாணவர்களில் தி.மு.க., பா.ஜனதா, இடது சாரிகளை சேர்ந்த ஆதரவாளர்கள் இருந்து இருக்கலாம். ஆனால் அவர்களால் எந்த வன்முறையும் வெடிக்கவில்லை. மத்திய, மாநில அரசுகளை விமர்சித்தால் வன்முறையில் ஈடுபடுவோம் என்பதை போல் காவல் துறையினர் நடந்து கொண்டனர். வன்முறைக்கு அரசியல் கட்சிகள் அல்லது அரசியல் சக்திகள் மீது பழியை போடுவது அபாண்டமானது.
இவ்வாறு அவர் கூறினார்.

வீரவணக்கநாள் பொதுக்கூட்டம்

தொடர்ந்து நாமக்கல் பூங்கா சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடந்த வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் பேசினார்.

இந்த கூட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் பழ.மணிமாறன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சீனிவாசன் வரவேற்று பேசினார். மேற்கு மாவட்ட செயலாளர் காமராஜ் முன்னிலை வகித்தார். இதில் முதன்மை செயலாளர் உஞ்சையரசன், மாநில துணை பொதுச்செயலாளர் கனியமுதன் உள்பட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக நாமக்கல் என்.ஜி.ஜி.ஓ. காலனியில் ஓய்வுபெற்ற தாசில்தார் பழனியாண்டியின் படத்திறப்பு விழா மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் திருமாவளவன் கலந்து கொண்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com