

சூரியன் நீச்சமடையும் ஐப்பசி மாதத்தில் அதன் எதிர்மறை தாக்கங்களை குறைக்க சில குறிப்பிட்ட திதி மற்றும் நட்சத்திர நாளில் செய்யும் பூஜை, வழிபாடு பல மடங்கு பலன் தரும்.
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட வீடு உச்சமாகவும், அதன் நேர் எதிர் 180 டிகிரியில் உள்ள வீடு நீச்சமாகவும் வரும். கிரகங்கள் உச்ச வீட்டில் சஞ்சாரம் செய்யும் போது பூமிக்கு மிக அருகில் இருக்கும். அதன் வலிமையும் மிகுதியாக இருக்கும். உச்ச கிரகங்களின் கதிர் வீச்சு பூமிக்கு மிகுதியாக கிடைக்கும். ஒரு கிரகம் நீசம் பெறும்போது பூமிக்கு வெகு தொலைவில் இருக்கும். அதாவது ஒரு கிரகம் பூமிக்கு தொலைவில் செல்லும் பொழுது தனது ஒளியை பிரதிபலிக்க இயலாத தன்மையை குறிக்கும். நீசம் பெற்ற கிரகத்தின் அதிர்வலைகள் பூமிக்கு குறைவாக இருக்கும். ஒரு கிரகம் அதன் உச்ச வீட்டில் இருக்கும் போது 100 சதவீதம் முழு பலம் பெறும். நீச்ச வீட்டில் அதன் பலத்தை முற்றிலும் இழக்கும்.
நீசம் பெற்ற கிரகத்தின் அதிர்வலைகள் பூமிக்கு குறைவாக இருக்கும். இதை மேலும் விளக்கமாக கூறுவதென்றால் சூரியன் உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை மனிதர்கள் அன்றாட பணியில் சுறுசுறுப்புடன் ஈடுபடுகிறார்கள். சூரியன் மறைந்தவுடன் (அதாவது சூரிய ஒளி மறைந்தவுடன்) உடல் அலுப்பு அதிகமாகி ஒய்வு எடுக்கிறார்கள். அதே போல் மனிதர்களுக்கு சூரியனின் பரிபூரண ஒளிக்கதிர் கிடைக்காத போது ஆன்ம பலம் குறையும் மனச்சோர்வு அதிகரிக்கும்..
ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களின் தலைவனான சூரிய பகவான் தனது நீச வீடான துலாம் ராசியில் சஞ்சரிக்கும் காலமே ஐப்பசி மாதமாகும். சித்திரை மாதத்தில் முழு உச்ச பலத்துடன் விளங்கும் சூரியன், அதற்கு நேர் எதிர் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் துலாம் ராசியில் பிரவேசித்து தனது உச்ச பலத்தை இழந்து நீச்சமடைகிறார். அதனால் ஐப்பசி மாதத்தில் வெயிலின் தாக்கம் முற்றிலுமாக குறைந்து, மேகமூட்டமும் வடகிழக்கு பருவமழையும் தீவிரமடையும். இதனால் சில பொதுவான தாக்கங்கள் ஏற்படும். குறிப்பாக சுயநம்பிக்கை குறையும். முடிவெடுப்பதில் தயக்கம் ஏற்படலாம். உடல் ரீதியான, மனரீதியான பலவீனம் இருக்கும்.
சூரியன் ஒளிகுன்றி நீசமடைந்துள்ள இந்த மாதத்தில், உலகிற்கு ஒளியூட்டவும் தோஷங்கள் விலகி இன்பம் பெற சில முக்கிய வழிபாடுகள், விசேஷங்கள் கடைபிடிக்கப்படுகிறது. மனித வாழ்வில் விதி தந்த பலனால் எவ்வழியில் சென்றால் வாழ்க்கை வளமானதாக அமையும் என்பதற்கு ஜோதிடம் கூறும் எளிய பரிகார வழிபாட்டு முறை திதி, நட்சத்திர வழிபாடு.
அதாவது, சூரியன் நீச்சமடையும் ஐப்பசி மாதத்தில் அதன் எதிர்மறை தாக்கங்களை குறைத்து மன உறுதி, சுயநம்பிக்கை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள அமாவாசை, பவுர்ணமி திதியிலும், சில குறிப்பிட்ட நட்சத்திர நாளில் செய்யும் பூஜை, வழிபாடு பல மடங்கு பலன் தரும். அமாவாசை திதி பித்ருக்கள் வழிபாட்டிற்கு சிறப்பான நாள். பவுர்ணமி திதி இறை வழிபாட்டிற்கும் பிரார்த்தனைக்கும் உகந்த நாள். குறிப்பாக ஐப்பசி பவுர்ணமி அன்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வதால் உணவு பற்றாக்குறை வராது. சூரியனின் பலவீனத்தை நிவர்த்தி செய்யவே இந்த வழிபாடு நடத்தப்படுகிறது. ஜாதகத்தில் சூரியன் நீச்சமாக இருப்பவர்களுக்கும் இந்த வழிபாடுகள் கைகொடுக்கும்.
அதிகாலையில் எழுந்து சூரிய பகவானை நோக்கி சூரிய நமஸ்காரம் செய்வது மற்றும் காயத்ரி மந்திரம் ஜெபிப்பது உடலுக்கும் மனதுக்கும் மிகுந்த ஆற்றலைத் தரும். சூரியனுக்கு அதிதேவதை சிவபெருமான் என்பதால், ஞாயிற்றுக்கிழமைகளில் சிவன் கோவிலுக்குச் சென்று வழிபடுவது சூரிய தோஷங்களை நீக்கும். சூரியனுக்குரிய தானியமான கோதுமையை ஏழைகளுக்கு அல்லது கோவில்களுக்கு தானமாக வழங்குவது சிறந்தது.