நட்சத்திரங்களின் வடிவம் எப்படி இருக்கும் தெரியுமா?

நட்சத்திரங்களின் தன்மை, தோற்றம் ஆகியவற்றுக்கு ஏற்ப ஜோதிட அறிஞர்கள் பல்வேறு உருவங்களாக அமைத்திருக்கிறார்கள்.
வான் மண்டலம்
வான் மண்டலம்
Published on: 

வான் மண்டலத்தில் கோடானு கோடி நட்சத்திரங்கள் தனித்தும் கூட்டமாகவும் இருக்கின்றன. இந்த நட்சத்திர கூட்டங்களை நம் முன்னோர்கள் 27 பிரிவுகளாக பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும் அப்பிரிவில் உள்ள முக்கிய நட்சத்திரத்தின் பெயரை சூட்டி உள்ளனர். சந்திரன் பூமியைச் சுற்றிவரும் 27.32 நாட்கள் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு, வான வட்டப்பாதையை 27 சம பாகங்களாகப் பிரித்து, அதன் அடிப்படையில் இந்த 27 நட்சத்திரங்களும் தொகுக்கப்பட்டு, ஜோதிட கணக்கீட்டில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நட்சத்திரங்கள் எண்ணிக்கையில் எப்படி இருந்தாலும் அவற்றுக்கென உருவ அமைப்பு உள்ளது. அவற்றின் தன்மை, தோற்றம், ஆகியவற்றுக்கு ஏற்ப ஜோதிட அறிஞர்கள் பல்வேறு உருவங்களாக அமைத்திருக்கிறார்கள். இந்த உருவத் தோற்றம் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு விதமாக அமைந்துள்ளது. அதன் விவரம்:

1.அஸ்வினி: மூன்று நட்சத்திரங்களுடன் குதிரைத் தலை போல இருக்கும் .

2.பரணி: மூன்று நட்சத்திரங்களுடன் கல் அடுப்புப் போல காட்சி தரும் .

3.கார்த்திகை: ஆறு நட்சத்திரங்கள் சேர்ந்து சுற்றி , தீபம் போல காட்சி தரும் .

4.ரோகிணி : ஐந்து நட்சத்திரங்கள் சேர்ந்து சக்கரம் போல தோன்றும் .

5.மிருகசீரிடம்: மூன்று நட்சத்திரங்கள் கூடி தேங்காய்க் கண் அல்லது மான் தலை போல காட்சி தரும்.

சக்கரம்

6.திருவாதிரை: ஒரே ஒரு நட்சத்திரம் ரத்தினம் போல ஜொலிக்கும்

7.புனர்பூசம்: ஐந்து நட்சத்திரங்கள் கூடி வில், ஓடம் போல காட்சி தரும்

8.பூசம்: மூன்று நட்சத்திரங்கள் இணைந்து புடலம் பூ போல தோற்றமளிக்கும்.

9.ஆயில்யம்: ஆறு நட்சத்திரங்கள் கூடி அம்மி அல்லது குயவன் சக்கரம் போல காட்சியளிக்கும்.

10.மகம்: ஐந்து நட்சத்திரங்கள் வீடு போல கூடியிருக்கும்.

மின்னும் சுவாதி

11.பூரம்: நான்கு நட்சத்திரங்கள் இணைந்து கட்டிலின் கால் போல இருக்கும்.

12.உத்திரம்: நான்கு நட்சத்திரங்கள் கட்டிலின் கால் போல் அல்லது யானைத் தந்தம் போல் காட்சி தரும்.

13.அஸ்தம்: ஐந்து நட்சத்திரங்கள் சேர்ந்து கை போன்று தோற்றமளிக்கும்.

14.சித்திரை: ஒரே ஒரு நட்சத்திரம். இது முத்து அல்லது புலிக் கண் போன்ற அமைப்பில் இருக்கும்.

15.சுவாதி: ஒரே ஒரு நட்சத்திரம் மட்டும். மணி அல்லது பவளம் போல மின்னும்.

சிங்கம் போன்ற தோற்றம்

16.விசாகம்: ஐந்து நட்சத்திரங்கள் தோரணம் போல் காட்சி தரும்.

17.அனுஷம்: நான்கு நட்சத்திரங்கள் கையில் பிடித்துள்ள குடை போல இருக்கும்.

18.கேட்டை: மூன்று நட்சத்திரங்கள் மோதிரம் போல இருக்கும் .

19.மூலம் : பதினொரு நட்சத்திரங்கள் இணைந்து சிங்கம் பாய்வது போல காட்சி தரும்.

20.பூராடம்: நான்கு நட்சத்திரங்கள் கட்டிலின் கால் போல் இருக்கும்.

பூங்கொத்து அமைப்பில் சதயம்

21.உத்திராடம்: நான்கு நட்சத்திரங்கள் கூடி கட்டில் கால் போன்று காட்சி தரும்.

22.திருவோணம்: மூன்று நட்சத்திரங்கள் முழக்கோல் போன்று இருக்கும்.

23.அவிட்டம்: 5 நட்சத்திரங்கள் மிருதங்கம், உடுக்கை, மத்தளம் போல் இருக்கும்.

24.சதயம்: 100 நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து பூங்கொத்து போல காட்சி தரும்.

25.பூரட்டாதி: நான்கு நட்சத்திரங்கள் ஒன்று கூடி கட்டிலின் கால் போல தோன்றும்.

26.உத்திரட்டாதி: நான்கு நட்சத்திரங்கள் ஒன்று கூடி கட்டிலின் கால் போலத் தோன்றும் .

27.ரேவதி: முப்பத்திரண்டு நட்சத்திரங்கள் சேர்ந்து ஓடம் போல இருக்கும்.

X