இன்னும் 5 நாளில் குருப்பெயர்ச்சி.. குரு பகவானின் நேரடி பார்வை பெறும் அதிர்ஷ்ட ராசிகள்

குருப் பெயர்ச்சி காலத்தில், மக்கள் தங்கள் சுய ஜாதக அடிப்படையில் நடைபெறும் திசாபுத்தி பலமறிந்து, அதற்குரிய அனுகூலம் தரும் ஆலயங்களை தேர்ந்தெடுத்து வழிபடுவது நல்லது.
குருப்பெயர்ச்சி 2025
Published on

வளமான வாழ்வை அருளும் குரு பகவான், இந்த ஆண்டு ரிஷப ராசியில் இருந்து வெளியேறி மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025 அன்று குருப்பெயர்ச்சி நடக்க இருக்கிறது. அதாவது, விசுவாவசு வருடம் சித்திரை மாதம் 28-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை (11.5.2025) அன்று பகல் 1.24 மணிக்கு மிருகசீரிட நட்சத்திரம் 3-ம் பாதத்தில் மிதுன ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகிறார். திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 14.5.2025 அன்று குருப்பெயர்ச்சி நிகழ்கிறது.

குரு பகவான் தன் பார்வை பலத்தால் மக்களுக்கு மிகுந்த நற்பலன்களை வழங்குவார். குறிப்பாக, இடப்பெயர்ச்சியின்போது பார்வை பலத்தால் 5, 7, 9 ஆகிய இடங்களை பார்த்துப் புனிதப்படுத்துவார். "குரு பார்க்க கோடி நன்மை" என்றும், "குரு சேர்ந்தால் கோடி தோஷ நிவர்த்தி" என்றும் ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது. அந்த அடிப்படையில் இந்த ஆண்டு பெயர்ச்சியின்போது குருவின் பார்வை துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளில் பதிகின்றது.

துலாம் ராசிக்காரர்களைப் பொறுத்தவரை 8-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான் 11.5.2025 அன்று 9-ம் இடத்திற்குப் பெயர்ச்சியாகி, ஒளிமயமான வாழ்விற்கு உத்தரவாதம் கொடுக்கப் போகின்றார். இதுவரை தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். வறட்சி நிலை மாறி வளர்ச்சி நிலை ஏற்படும்.

தனுசு ராசிக்காரர்களைப் பொறுத்தவரை, இதுவரை அவர்களின் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான் 11.5.2025 அன்று 7-ம் இடமான களத்திர ஸ்தானத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். அங்கிருந்து கொண்டு நேரடியாக துலாம் ராசியைப் பார்ப்பதால், "குரு பார்க்க கோடி நன்மை" என்பதற்கேற்ப இனி அவர்களுக்கு நல்ல காலம் தொடங்கிவிட்டது. தொட்டது துலங்கும். தொடர் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் திருப்தி தரும்.

கும்ப ராசிக்காரர்களுக்கு இதுவரை அவர்களின் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரிதுது வந்த குருபகவான் 11.5.2025 அன்று 5-ம் இடத்திற்குப் பெயர்ச்சியாகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை அவர்களின் ராசியிலேயே பதியப் போவதால் இக்காலம் ஒரு பொற்காலமாக மாறும், எடுத்த செயல்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும், இல்லத்தில் சுப காரியங்கள் கைகூடும்.

பொதுவாக குரு பார்வை பதியும் இடங்களில் எல்லாம் வளம் கொழிக்கும், நலம் கிடைக்கும், பகை உணர்வு மாறி பாச உணர்வு கூடும். நிலையான வருமானமும், நீடித்த புகழும் கிடைக்கும். செல்வாக்கு மிக்கவர்களாக பவனி வரும் வாய்ப்பும் உண்டு.

ஜென்ம குருவாக மிதுனத்திற்கும், அர்த்தாஷ்டம குருவாக மீனத்திற்கும், அஷ்டமத்து குருவாக விருச்சிகத்திற்கும், விரய குருவாக கடகத்திற்கும், ரோக ஸ்தான குருவாக மகரத்திற்கும் வருவதால் மேற்கண்ட ராசிகளில் பிறந்தவர்களும், வளமான வாழ்வை அமைத்துக் கொள்ள நினைப்பவர்களும் தங்கள் சுய ஜாதக அடிப்படையில் நடைபெறும் திசாபுத்தி பலமறிந்து, அதற்குரிய அனுகூலம் தரும் ஆலயங்களைத் தேர்ந்தெடுத்து யோகபலம் பெற்ற நாளில் வழிபடுவது நல்லது. அவ்வாறு வழிபட்டு வந்தால் திருமணம், புத்திரப்பேறு, தொழில் முன்னேற்றம், வருமான உயர்வு, அரசியல் செல்வாக்கு, வீடு வாங்கும் யோகம், வழக்குகளில் வெற்றி, உத்தியோகத்தில் உயர்வு, குடும்பத்தில் மகிழ்ச்சி போன்றவை தக்க விதத்தில் நடைபெறும்.

இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் குருபகவான் 8.10.2025 அன்று கடக ராசிக்கு அதிசாரமாக பெயர்ச்சியாகிச் சென்று உச்சம் பெறுகிறார். அப்பொழுது குருவின் பார்வை விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய மூன்று ராசிகளில் பதிவதால் அந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

இந்த குருப்பெயர்ச்சியால் தங்கம், வெள்ளி, எரிபொருள், டீசல், பெட்ரோல், கட்டுமானப் பொருட்கள், மின்சாதனப் பொருட்கள் போன்றவற்றின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. விஞ்ஞான வளர்ச்சியும், மருத்துவத் துறையின் முன்னேற்றமும், விளையாட்டு வீரர்களின் திறமையும் பளிச்சிடும். அரசியல் களம் சூடுபிடிக்கும்.

இதற்கிடையில் வாக்கிய பஞ்சாங்க ரீதியான சனிப்பெயர்ச்சி 6.3.2026 அன்று நிகழ்கிறது. மீன ராசிக்கு சனிபகவான் செல்கிறார். இடையில் கடக ராசியிலும், மிதுன ராசியிலும், குருபகவான் வக்ரம் அடைகின்றார். இவற்றைப் பொறுத்தும், சுழலும் மற்ற கிரகங்களின் அமைப்பைப் பொறுத்தும், அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளைப் பொறுத்தும் முழுமையான பலன்களை கணிக்கலாம்.

குருப்பெயர்ச்சியன்று குருவின் சன்னிதியில் நின்று குருகவசம் பாடி வழிபடுவதுடன், பெரியவர்களின் ஆசிகளை பெற்றால் வாழ்வு வளமாகும் என்பது நம்பிக்கை.

மிதுன குருவின் சஞ்சாரம்

* 11.5.2025 முதல் 5 9.6.2025 மிருகசீரிட நட்சத்திரக் காலில் குருபகவான் (செவ்வாய் சாரம்)

* 10.6.2025 முதல் 5 7.8.2025 திருவாதிரை நட்சத்திரக் காலில் குருபகவான் (ராகு சாரம்)

* 8.8.2025 முதல் 25.5.2026 புனர்பூசம் நட்சத்திரக் காலில் குருபகவான் (சுய சாரம்)

* மிதுனம் மற்றும் கடகத்தில் வக்ரம் அடைகின்றார்

* 26.5.2026 அன்று புனர்பூசம் 4-ல் முறையாக கடக ராசிக்கு குரு பகவான் செல்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com