

பெங்களூரு:
பெங்களூருவில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்ய முயன்றதாக கூறி தனியார் மருத்துவமனை டாக்டரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
டாக்டரை தாக்கியதாக...
பெங்களூருவில் சட்டவிரோதமாக ரெம்டெசிவிர் மருந்து விற்கும் கும்பல் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்ய முயன்றதாக கூறி, தனியார் மருத்துவமனை டாக்டரான நாகராஜ் என்பவரை, சஞ்சய்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகாயினி விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளார்.
விசாரணையின்போது டாக்டர் நாகராஜை, கார்த்திகாயினி கண்மூடித்தனமாக அடித்து, உதைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி நாகராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இன்ஸ்பெக்டர் கார்த்திகாயினி மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
விசாரணை நடத்த உத்தரவு
அதே நேரத்தில் கார்த்திகாயினியின் உறவினர், நாகராஜ் வேலை செய்யும் மருத்துவமனையில் கொரோனாவுக்காக அனுமதிக்கப்பட்டு உயிர் இழந்ததாகவும், இதற்காக நாகராஜை பிடித்துச் சென்று ரூ.20 லட்சத்தை உறவினருக்கு கொடுக்க வேண்டும் என்றும் இன்ஸ்பெக்டர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
அத்துடன் நாகராஜிடம் இருந்து ரூ.6 லட்சத்தை வாங்கி, உறவினரிடம் இன்ஸ்பெக்டர் கார்த்திகாயினி கொடுத்தாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகாயினி மறுத்துள்ளார்.
அதே நேரத்தில் டாக்டர் நாகராஜை, இன்ஸ்பெக்டர் தாக்கிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதால், இந்த விவகாரம் குறித்து கார்த்திகாயினி மீது உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி ஜே.சி.நகர் உதவி போலீஸ் கமிஷனர் ரீனா சுவர்ணாவுக்கு, வடக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் தர்மேந்திரகுமார் மீனா உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாகராஜை தாக்கிய விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் கார்த்திகாயினி உள்பட 4 போலீசார் பணி இடைநீக்கமும் செய்யப்பட்டு உள்ளனர்.
========