29-ந் தேதிக்குள் பூத் சிலிப் வழங்கப்படும்- ஆலோசனை கூட்டத்தில் தகவல்

உள்ளாட்சி தேர்தலுக்கான பூத் சிலிப் வருகிற 29-ந் தேதிக்குள் வழங்கப்படும் என ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
29-ந் தேதிக்குள் பூத் சிலிப் வழங்கப்படும்- ஆலோசனை கூட்டத்தில் தகவல்
Published on

நெல்லை:

நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பூத் சிலிப் வருகிற 29-ந்தேதிக்குள் (புதன்கிழமை) வழங்கப்படும் என்று தேர்தல் பார்வையாளர் ஜெயகாந்தன் மற்றும் கலெக்டர் விஷ்ணு ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

ஆலோசனை கூட்டம்

ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம், நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தேர்தல் பார்வையாளர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் விஷ்ணு, போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்போது அதிகாரிகள் பேசியதாவது:-

1,188 வாக்குச்சாவடி மையங்கள்

நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 1,188 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் முதல் கட்டமாக 6&ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும் அம்பை, சேரன்மாதேவி, மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி ஆகிய 5 ஒன்றியங்களில் 621 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த 5 ஒன்றியங்களில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 765 ஆண்கள், 1 லட்சத்து 78 ஆயிரத்து 234 பெண்கள், 43 மூன்றாம் பாலினத்தவர்கள் வாக்காளர்களாக உள்ளனர்.

2&வது கட்டமாக 9&ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும் களக்காடு, நாங்குநேரி, ராதாபுரம், வள்ளியூர் ஒன்றியங்களில் 567 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படுகிறது. இந்த 4 ஒன்றியங்களில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 722 ஆண்கள், 1 லட்சத்து 65 ஆயிரத்து 91 பெண்கள், 13 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 3 லட்சத்து 25 ஆயிரத்து 826 வாக்காளர்கள் உள்ளனர்.

பதற்றமான வாக்குச்சாவடிகள்

முதல்கட்ட தேர்தல் நடைபெறும் ஒன்றியங்களில் 182 வாக்குச்சாவடிகள், 2&வது கட்ட தேர்தல் நடைபெறும் ஒன்றியங்களில் 151 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக உள்ளது. இங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு, வீடியோ பதிவுகள், நுண் தேர்தல் மேற்பார்வையாளர்கள், இணையதள கண்காணிப்பு போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும். முதல்கட்ட தேர்தலுக்கு 5,035 அலுவலர்களும், 2&வது கட்ட தேர்தலுக்கு 4,521 அலுவலர்களும் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

தேர்தல் தொடர்பான புகார்களை 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 1800 4258 373 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், 7402608438 என்ற வாட்ஸ்&அப் எண்ணிலும் தெரிவிக்கலாம். 9 ஒன்றியங்களில் உள்ள வாக்காளர்களுக்கு பூத் சிலிப் எனப்படும் வாக்குச்சாவடி விவரம் குறித்த சீட்டுகள் வருகிற 29&ந்தேதிக்குள் (புதன்கிழமை) வழங்கி முடிக்கப்படும். ஓட்டுப்பதிவின் போது வாக்காளர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அழகிரி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அருணாசலம், மகளிர் திட்ட அலுவலர் சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராம்லால் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com