

தங்கம் விலை கட்டுக்கடங்காத காளையை போல துள்ளிக்குதித்து எகிறி உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் பெரிய அளவில் உயர்வு என்பது எப்போதாவது ஒரு நாள் இருக்கும். ஆனால் சமீப நாட்களாக தினமும் காலை மற்றும் பிற்பகலில் விலை மாற்றம் கண்டு, பவுனுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையில் உயர்ந்து வருவதையே பார்க்க முடிகிறது.
தங்கம் விலை:-
அந்த வகையில், இன்று இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளது. வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,190 அதிகரித்து ஒரு கிராம் ரூ.16,800-க்கும் பவுனுக்கு ரூ.9,520 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1,34,400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது
வெள்ளி விலை:-
வெள்ளி விலையும் இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கிராமுக்கு ரூ.25-ம், கிலோவுக்கு ரூ.25 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.425-க்கும், ஒரு கிலோ ரூ.4 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்படியாக விலை ஏறிச்சென்றால், தங்கம் எட்டாக்கனியாகிவிடுமோ? என்ற அச்சம் நடுத்தர வர்க்கத்தினரிடையே நிலவி வருகிறது. இனிவரும் நாட்களிலும் விலை ஏற்றம் இருந்தாலும், அவ்வப்போது விலை சற்று குறையும் என்றே சொல்லப்படுகிறது.
விலை உயர்வுக்கு காரணம் என்ன...?
சர்வதேச சந்தையில் ஒரு ‘அவுன்ஸ்’ தங்கம், அதாவது 31.5 கிராம் தங்கம் இந்திய மதிப்பில் ரூ.4 லட்சத்து 58 ஆயிரத்து 800-ஐ (5 ஆயிரம் டாலர்கள்) கடந்தது, அமெரிக்காவின் தொடர் வர்த்தகப் போர், ஐரோப்பிய நாடுகளுடன் மோதல் போக்கு, அமெரிக்க டாலர் வீழ்ச்சி, மத்திய வங்கிகளின் தங்க கொள்முதல் அதிகரிப்பு, போர்ச்சூழல், தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுவது போன்றவை தங்கம் விலை உயருவதற்கான முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. தங்கம் விலை அதிரடி உயர்வு என்பது நடுத்தர மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.