

சென்னை,
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு இன்று அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதன்படி, தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இறக்குமதி வரி உயர்வு காரணமாக தங்கம், வெள்ளியின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.8,560 அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,23,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.1,070 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.15,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலையைப் போல வெள்ளி விலையும் இன்று காலை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.30-ம், கிலோவுக்கு ரூ.30 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.330-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,070 உயர்ந்த நிலையில், மாலையில் ரூ.400 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,200 குறைந்து ரூ.1,20,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.400 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.15,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல், காலையில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.30,000 உயர்ந்த நிலையில், மாலையில் ரூ.10,000 குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.320-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.