

கடந்த சில நாட்களாக இந்திய பங்குச் சந்தை சற்று ஏற்ற இறக்கத்தில் உள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் உலகளவில் பல்வேறு சந்தைகளை உலுக்கியுள்ளன. இந்திய பங்குச் சந்தையும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு வாரத்திற்குள், நிஃப்டி 50 மிகப்பெரிய அளவில் 1.8 சதவீதமும், சென்செக்ஸ் 3.52 சதவீதமும் சரிந்துள்ளது. இத்தகைய வீழ்ச்சி காணப்படும் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. இதே நிலைதான் இன்றும் நீடித்தது. வாரத்தின் முதல் நாளான இன்றும் இந்திய பங்குச்சந்தையில் கடும் சரிவே இருந்தது.
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பணத்தை திரும்பப் பெறுதல் மற்றும் இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பு குறித்த அச்சம் ஆகியவற்றால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர். உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடான இந்தியாவுக்கு இந்த நிலைமை பொருளாதார சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.
இதனால் இன்று மட்டும் சந்தை மூலதன மதிப்பில் சுமார் ரூ.12.78 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீடு 2,299.65 புள்ளிகள் அல்லது 2.91 சதவீதம் சரிந்து 76,619.25 புள்ளிகளில் வர்த்தகமாகி வந்தது.