

சென்னை,
கச்சா எண்ணெய் விலை , டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகள் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
இதனிடையே, மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேவேளை, 5 மாநில தேர்தல் நடைபெற்று வந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. தற்போது தேர்தல் நிறைவடைந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது.
அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.84க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ரூ. 3.14 விலை உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 103.98க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ. 92.39க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ரூ. 3.11 விலை உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் டீசல் ரூ. 95.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை உயர்வால் அனைத்து வகையிலான பொருட்களின் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.