கர்நாடகத்தில் டிசம்பர் மாத இறுதிக்குள் 8 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு - குணமடைபவர்களின் எண்ணிக்கை 41.52 சதவீதமாக உயர்வு

கர்நாடகத்தில் டிசம்பர் மாத இறுதிக்குள் 8 லட்சம் பேர் வரை கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் கர்நாடகத்தில் குணமடைபவர்கள் எண்ணிக்கை 41.52 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கர்நாடகத்தில் டிசம்பர் மாத இறுதிக்குள் 8 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு - குணமடைபவர்களின் எண்ணிக்கை 41.52 சதவீதமாக உயர்வு
Published on

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் தினமும் சராசரியாக 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. பெங்களூரு நகரில் கொரோனா பாதிப்பு இல்லாத பகுதியே இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. ஏற்கனவே நிபுணர்கள் கூறியபடி கடந்த மாதம் (ஜூலை) மட்டும் கர்நாடகத்தில் 1 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது கர்நாடகத்தில் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். அது கடந்த ஜூலை மாதம் நிரூபணமாகி உள்ளது.

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 29 ஆயிரத்து 287 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 53 ஆயிரத்து 648 பேர் குணமடைந்து உள்ளனர். 73 ஆயிரத்து 219 பேருக்கு கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 2,412 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி தங்களது உயிரை பறி கொடுத்துள்ளனர்.

கர்நாடகத்தில் மார்ச் மாதம் 101 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஏப்ரல் மாதத்தில் 5 மடங்காக உயர்ந்து 565 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு இருந்தது. மே மாதத்தில் 3 ஆயிரத்து 221 பேருக்கும், ஜூன் மாதம் இறுதியில் 15 ஆயிரத்து 242 பேருக்கும், ஜூலை 31-ந் தேதி வரை கர்நாடகத்தில் 1 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நிபுணர்கள் கூறியபடி நடப்பு மாதம் (ஆகஸ்டு) கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். அதற்கு ஏற்றவாறு தினமும் சராசரியாக 30 ஆயிரம் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதே நிலை தொடர்ந்து நீடித்தால் இந்த மாத இறுதிக்குள் அல்லது செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் கர்நாடகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சமாக உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இந்த மாதம், அடுத்த மாதம் (செப்டம்பர்) மற்றும் அக்டோபர் வரை 3 மாதங்கள் கர்நாடகத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், அதன்பிறகு தான் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இன்னும் 3 மாதங்கள் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அதே நேரத்தில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கிடைக்க தாமதமாகும் பட்சத்தில் டிசம்பர் மாதம் வரை கொரோனா தாக்கம் இருந்தால், கர்நாடகத்தில் 8 லட்சம் பேர் வரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், கர்நாடகத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி குணமடைவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது கடந்த மாதம் (ஜூலை) 22-ந் தேதி வரை குணமடைபவர்கள் எண்ணிக்கை வெறும் 6.81 சதவீதமாக மட்டுமே இருந்தது. அது படிப்படியாக உயர்ந்து கடந்த 1-ந் தேதி 41.52 சதவீதமாக குணமடைபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com