

தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவின்பேரில், காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று திருவிழா கூட்ட நெரிசலில் பக்தர் ஒருவரின் குழந்தை பெற்றோரை பிரிந்து தனியாக நின்று அழுது கொண்டிருந்தது. அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி மற்றும் போலீசார், அந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
உடனடியாக கோவில் வளாகத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்குக் குழந்தையை அழைத்துச் சென்று, ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர். அதன் அடிப்படையில் விரைந்து வந்த பெற்றோரிடம் குழந்தை பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. மனிதாபிமானத்துடன் விரைந்து செயல்பட்ட இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை மாவட்ட எஸ்.பி. பாராட்டினார்.