புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி
Published on

வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

வேளாங்கண்ணி பேராலயம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் ஏசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள் நள்ளிரவில் ஏசு பிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

இதை முன்னிட்டு விண்மீன் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அரசு அறிவுரையின்படி சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் விண்மீன் ஆலயத்தின் அருகே உள்ள சேவியர் மாநாட்டு பந்தலில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டது.

ஏசு பிறப்பு நிகழ்ச்சி

கிறிஸ்மஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் பேராலய தியான மண்டபம் செல்லும் வழியில் மின் விளக்குகளால் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. பேராலயத்தை சுற்றி அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலியில் கலந்து கொள்ள தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த திரளானோர் நேற்று முன்தினம் வேளாங்கண்ணியில் குவிந்தனர். நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு ஏசு பிறப்பு நிகழ்ச்சி சேவியர் மாநாட்டு பந்தலில் நடந்தது. இதையொட்டி வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி

இதை தொடர்ந்து குழந்தை ஏசு சொரூபம் பவனியாக எடுத்து வரப்பட்டு பேராலய அதிபர் இருதயராஜிடம் வழங்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த மக்களிடம் குழந்தை ஏசு சொரூபத்தை தூக்கி காண்பித்து ஏசு பிறந்ததாக பேராலய அதிபர் அறிவித்தார்.

பின்னர் 11.55 மணிக்கு குழந்தை ஏசு சொரூபத்தை பங்குத்தந்தை அற்புதராஜ் பெற்று அருகிலுள்ள குடிலில் வைத்தார்.இதில் திரளானோர் சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்து கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர். திருப்பலியில் வேளாங்கண்ணி பேராலய பொருளாளர் உலகநாதன், உதவிப் பங்குத்தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் தமிழ், ஆங்கிலம், மலையாளம, தெலுங்கு, கொங்கனி ஆகிய மொழிகளில் திருப்பலி நடந்தது.

இதனையெட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

--------

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com