

அய்யம்பேட்டை,
செவ்வந்தி பூக்கள்
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள பூஞ்சேரி, மேல உத்தமநல்லூர், மாத்தூர், ஈச்சங்குடி ஆகிய ஊர்களில் அதிகளவில் செவ்வந்தி பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு முதல் பொங்கல் பண்டிகை வரை அறுவடை செய்யும் வகையில் செவ்வந்தி பூக்கள் இப்பகுதியில் பயிர் செய்யப்படுகிறது. தற்போது பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாளே உள்ளதால், அய்யம்பேட்டை பகுதியில் செவ்வந்தி பூக்கள் அறுவடை பணி நடைபெற்று வருகிறது.
செவ்வந்தி பூக்கள் சாகுபடி குறித்து மேலஉத்தம நல்லூரைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-
அய்யம்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பே செவ்வந்தி பூக்களின் அறுவடை பணி தொடங்கிவிட்டது. இருப்பினும் பொங்கலுக்கு இன்னும் 2 நாளே உள்ளதால் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளன. இங்கு விளையும் செவ்வந்தி பூக்கள் தஞ்சை, கும்பகோணம், திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
விவசாயிகள் எதிர்பார்ப்பு
ஒரு கிலோ செவ்வந்தி பூ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்தால் தான் விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைக்கும். ஆனால் தற்போது சேலம், ஓசூர், துவரங்குறிச்சி ஆகிய பகுதிகளில் இருந்து செவ்வந்தி பூக்கள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வருவதால், இங்கு விளையும் பூக்களின் விலை வீழ்ச்சி காணப்படுகிறது. அய்யம்பேட்டை பகுதியில் விளையும் செவ்வந்தி பூக்கள் இப்போது 1 கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை மட்டுமே விற்பனையாகிறது. பொங்கலுக்கு இன்னும் 2 நாளே உள்ளதால் செவ்வந்தி பூக்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.