சினிமா பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் நடிகை ஆஷ்னா சவேரி

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ஆஷ்னா சவேரி தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது.
சினிமா பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் நடிகை ஆஷ்னா சவேரி
Published on

மும்பையை பூர்வீகமாகக் கொண்ட நடிகை ஆஷ்னா சவேரி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த நடிகைகளில் ஒருவராக அறியப்படுகிறார். கடந்த 2014-ம் ஆண்டு வெளியான 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அவர், தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அதனைத் தொடர்ந்து 'இனிமே இப்படித்தான்', 'மீன் குழம்பும் மண் பானையும்', 'பிரம்மா டாட் காம்', 'நாகேஷ் திரையரங்கம்', 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவரது இயல்பான நடிப்பும், திரைப்பிரசன்னமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

கதாநாயகி வாய்ப்புகள் குறைந்த காலம்

ஒரு கட்டத்தில் கதாநாயகி வாய்ப்புகள் குறைந்த நிலையில், ஆஷ்னா சவேரி பல்வேறு கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். 'கன்னித்தீவு' திரைப்படத்தில் நான்கு நாயகிகளில் ஒருவராக நடித்த அவர், பின்னர் 'மை3' தொடரில் ஹன்சிகா உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றினார்.

இருப்பினும், முழுமையான கதாநாயகி அந்தஸ்தில் மீண்டும் நடிக்கும் வாய்ப்புக்காக காத்திருந்த அவருக்கு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

‘வள்ளுவன்’ மூலம் புதிய தொடக்கம்

சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆஷ்னா சவேரி மீண்டும் கதாநாயகியாக நடித்து வரும் படம் ‘வள்ளுவன்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சங்கர் சாரதி இயக்கி வருகிறார். இதில் நடிகர் சேத்தன் சீனி நாயகனாக நடிக்க, இசையமைப்பாளர் அஷ்வத் இசையமைக்கிறார்.

புதிய கதைக்களம் மற்றும் வித்தியாசமான கதாபாத்திரத்துடன் உருவாகி வரும் இந்த திரைப்படம், ஆஷ்னா சவேரியின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதாநாயகியாக களமிறங்கியுள்ள அவர், ‘வள்ளுவன்’ திரைப்படம் தனது சினிமா பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கும் என்ற நம்பிக்கையுடன் பணியாற்றி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com