‘லப்பர் பந்து' படத்துக்கு பிறகு கைவிட்டு போன 100 படங்கள்- அட்டகத்தி தினேஷ்

நடிகர் தினேஷ் தற்போது தண்ட காருண்யம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
சென்னை,
‘லப்பர் பந்து' படத்துக்கு பிறகு 'அட்டகத்தி' தினேஷ் நடித்துள்ள படம், 'தண்ட காருண்யம்'. ஆதியன் ஆதிரை இயக்கத்தில் உருவான இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.
இதுகுறித்து 'அட்டகத்தி' தினேஷ் கூறுகையில், ''சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எனக்கு கூச்ச சுபாவம் நிறைய இருந்தது. இதனாலேயே கல்லூரி முடித்தும், வேலைக்கு சேராமலேயே இருந்து வந்தேன். அப்படி, இப்படி என பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு சினிமாவில் நடிகனாகி விட்டேன். நடிக்க ஆரம்பித்த பிறகும் கூச்சம் என்னை விட்டு போகவில்லை. கேமராவை பார்த்தாலே எனக்கு சிரிப்பு வராது. 'குக்கூ' படத்தில் நடித்தபிறகு என் நடிப்பு மேம்பட்டது. வேலை என்பது வேறு, வாழ்க்கை என்பது வேறு என்பதை உணர்ந்தேன்.
'லப்பர் பந்து' நான் ரசித்து செய்த படம். அந்த படத்துக்கு பிறகு 100 கதைகளை நான் கேட்டிருக்கிறேன். ஆனாலும் எதுவுமே அமையவில்லை. எனக்கு வேண்டாம் என்றாலும், அதை சிரித்தபடி அமைதியாக சொல்லிவிடுவேன். அழுகை காட்சி வேண்டாம், ஆக்ஷன் இருக்கலாம். வசனமே பேசாத கதாபாத்திரமாக இருந்தாலும் சரி. கூலாக வேலை செய்ய வேண்டும். இதெல்லாம் நான் விரும்புவது. என் விருப்பத்தையும் டைரக்டர்களிடம் முன்கூட்டியே சொல்லிவிடுவேன். எதையுமே தெளிவாக முன்கூட்டியே பேசிவிடுவது நல்லது'', என்றார்.






