நடிகர் அஜித்துக்கு கோவில்... உருவச் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து ரசிகர்கள் வழிபாடு

நடிகர் அஜித்குமாருக்கு சென்னையை அடுத்த கோவூரில் முழு உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
நடிகர் அஜித்துக்கு கோவில்... உருவச் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து ரசிகர்கள் வழிபாடு
Published on: 

சென்னை,

நடிகர் அஜித்குமாருக்கு சென்னையை அடுத்த கோவூரில் முழு உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. மேலும், அவருக்காக 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கோவில் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ‘அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகத்தினர்’ அறிவித்துள்ளனர்.

அஜித்துக்கு முழு உருவச் சிலை

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், திரைப்படங்களில் நடிப்பதுடன் கார் பந்தயங்களிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்காக ‘அஜித்குமார் ரேசிங்’ என்ற பெயரில் தனது கார் பந்தய அணியையும் அவர் தொடங்கியுள்ளார். தற்போது ‘டேர் டெவில்’ என்ற திரைப்படத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார்.

இந்த நிலையில், சென்னையை அடுத்த மாங்காடு அருகே உள்ள கோவூரில் நடிகர் அஜித்குமாருக்கு முழு உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. அஜித்தை முன்னிறுத்திச் செயல்பட்டு வரும் ‘அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகம்’ சார்பில் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

பால் அபிஷேகம் செய்து வழிபாடு

கோவூரில் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்துக்கு, அதன் தலைவர் பாபு தலைமை தாங்கினார். இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், அஜித்குமாரின் முழு உருவச் சிலையை கட்சித் தலைவர் பாபு திறந்து வைத்தார். தொடர்ந்து, சிலைக்கு பால் அபிஷேகம் செய்து, மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து வழிபட்டனர். மேலும், 108 தேங்காய்களை உடைத்தும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். அப்போது, நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் கட்சியினர் அழைப்பு விடுத்தனர்.

3 ஆயிரம் சதுர அடியில் கோவில்

இதற்கிடையே, கோவூரில் 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் நடிகர் அஜித்குமாருக்காகப் பிரத்யேகமாகக் கோவில் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கட்சித் தலைவர் பாபு தெரிவித்துள்ளார்.

திரைப்பட நட்சத்திரங்களின் பிறந்தநாள், பட வெளியீடு உள்ளிட்ட நிகழ்வுகளைக் கொண்டாடும் ரசிகர்கள், தற்போது அஜித்துக்கு முழு உருவச் சிலை நிறுவி, கோவில் அமைக்கவும் திட்டமிட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com