சிறையில் அமைதியாக நேரத்தை கழிக்கும் நடிகர் தர்ஷன்


Actor Darshan spends his time peacefully in jail
x
தினத்தந்தி 20 Aug 2025 2:46 PM IST (Updated: 20 Aug 2025 3:06 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் தர்ஷன் மீண்டும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து அவர்கள் சிறையில் இருந்து வெளியே வந்தனர். இந்த நிலையில் கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 7 பேரின் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து நடிகர் தர்ஷன் மீண்டும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த முறை பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது சலுகைகள் பெற்றதாக புகைப்படம் வெளியானது. இதனால் அவர் பல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த முறை நடிகர் தர்ஷனுக்கு எந்த சலுகைகள் எதுவும் கிடைக்காமல் இருக்க சிறை அதிகாரிகள் கவனமாக உள்ளனர்.

தர்ஷன் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு முன்பு நடைபாதை ஒன்று உள்ளது. அங்கு நடைபயிற்சி மேற்கொள்ள அவர் அனுமதிக்கப்படுகிறார். ஆனால் நடிகர் தர்ஷன் அந்த நடைபாதைக்கு வராமல், சிறை அறையிலேயே சுற்றித்திரிவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிறை ஊழியர்கள் வழங்கிய படுக்கையில் படுத்து தூங்கும் அவர், சக கைதிகளுடன் பேசாமல் அமைதியாக இருந்து வருகிறார். தினமும் அவர் செய்தித்தாள்களை படித்து நேரத்தை செலவிடுகிறார்.


1 More update

Next Story