

சென்னை,
திரையுலகில் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளும் நடிகர் பார்த்திபன், நிஜ வாழ்விலும் ஒரு முன்னோடி நடவடிக்கையாகத் தான் எந்தச் சாதியையும், மதத்தையும் சாராதவர் என்ற அதிகாரபூர்வ அரசுச் சான்றிதழைப் பெற்றுள்ளார்.
சாதி மற்றும் மத அடிப்படையிலான பிளவுகள் தேச ஒற்றுமைக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் வகையில், தன்னை "சாதி - மதமற்றவர்" என அறிவித்துச் சான்றிதழ் வழங்கக் கோரி நடிகர் பார்த்திபன் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார். முன்னதாக, சோழிங்கநல்லூர் வட்டாட்சியரிடம் அவர் அளித்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படாத நிலையில், கோர்ட்டை அவர் நாடினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம். தண்டபாணி, நடிகர் பார்த்திபனின் கோரிக்கையை ஏற்று, அவருக்கு ஒரு வார காலத்திற்குள் "சாதி, மதம் அற்றவர்" என்பதற்கான சான்றிதழை வழங்குமாறு சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில், கடந்த 27-ம் தேதி சோழிங்கநல்லூர் வட்டாட்சியர், பார்த்திபன் எந்தச் சாதியையும் மதத்தையும் சாராதவர் எனச் சான்றிதழ் வழங்கினார். இதன் மூலம் சட்டபூர்வமாகத் தனது சாதி, மத அடையாளங்களை அவர் துறந்துள்ளார். இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சான்றிதழ் வழங்கப்பட்ட விவரம் கோர்ட்டில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
அதன்பின்னர் நீதிபதி கூறியதாவது:-
ஜாதி, மத மற்றவர் என்பதை நாம் தான் பின்பற்ற வேண்டுமே தவிர, சான்றிதழ் அவசியம் இல்லை. விளம்பரத்துக்கு வேண்டுமானால் இந்த சான்று பயன்படும். ஜாதி மத மற்றவர் என சுய பிரகடனம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நம் நடத்தை மூலம் தான் அதை காட்ட வேண்டும். சாதி, மதமற்றவர் என சான்று வழங்க தாசில்தாருக்கும் அதிகாரம் இல்லை; ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலேயே சான்று வழங்க உத்தரவிடுகிறேன் எனக் கூறி வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவுபடி நடிகர் பார்த்திபன் ஜாதி மத மற்றவர் என்ற சான்றிதழை பெற்றுக்கொண்டார்.
அதன்பின்னர் நடிகர் பார்த்திபன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மனநிலை பாதிக்கப்பட்ட பார்த்திபனின் பணிவான வணக்கம். என்னை எல்லோரும் மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று சொல்கிறார்கள். ஏன் அப்படி சொல்கிறார்கள் என்றால் எனக்கு இந்த சாதி, மதம் தேவையில்லை என அப்படி ஒரு சான்றிதழை வாங்கி இருக்கிறேன்.
அவ்வாறு அதை வாங்கியதால் என்னை சிலர் பாராட்டுகிறார்கள், மிக சிலர் மனநிலை பாதிக்கப்பட்டவன் என சொல்கிறார்கள். ஆனால் இதை வழங்கியது சோழிங்கநல்லூர் தாசில்தார். மாண்புமிகு நீதியரசர் என்னை பாராட்டி இதை கொடுத்திருக்கிறார். இவை அனைத்தையும் செய்தவர்களை மனநலம் பாதிக்கப்பட்டவன் என அவர்கள் யாரை சொல்கிறார்கள். என்னை போல் பலர் சாதி மதமற்றவர் சான்றிதழ் வாங்க வேண்டும்.
என்னை பற்றிய விமர்சனங்கள் தேவையில்லை. நீதிபதி என்னை பாராட்டும் போதுகூட இந்த நாட்டில் நல்லவனாக இருக்கக்கூட ஒரு சான்றிதழ் தேவைப்படுகிறது என கூறி இந்த சான்றிதழை வழங்கினார். 35 வருட எனது சினிமா பயணத்தில் நல்ல கருத்துகளை சொல்லியிருக்கிறேன். தமிழ்நாட்டுக்கு தேவையான, மக்களுக்கு தேவையான நல்ல நல்ல பல திட்டங்களை எனது பார்த்திபன் மனிதநேய மன்றத்தின் மூலம் செய்து இருக்கிறேன். தொடர்ந்து நல்ல சினிமா படங்களை இயக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கு உங்களுடைய ஆதரவு எனக்கு வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.