

சென்னை,
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக கூட்டணியும் வியூகங்களை வகுக்கிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்டுகிறார்கள்.
இந்தநிலையில் தமிழக அரசியல் திடீர் திருப்பமாக விஜய்யின் டிவிகே கட்சிக்கு எதிராக ஏவிகே என்கிற பெயரில் புதிய கட்சியை தொடங்கி இருப்பதாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் அறிவித்துள்ளார். மேலும், டிவிகே - ஏவிகேஆகிய இரண்டு கட்சிகள் இடையே தான் போட்டி என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன், "அரசியலில் எனக்கு போட்டி நடிகர் விஜய் தான். எங்கள் இரண்டு கட்சிகளுக்கு இடையேதான் போட்டியே. அவர் டிவிகே. நான் ஏவிகே. ஏவிகே என்றால் அண்ணா வளர்ச்சி கழகம். இந்த கட்சியை நான் விரைவில் ஆரம்பிக்க போகிறேன். கட்சி தொடக்க விழாவிற்கு அனைவரையும் அழைப்பேன். எல்லோரும் கலந்துகொள்ள வேண்டும். இப்போதுதான் குழந்தை பிறந்து பெயர் வைப்பது போல கட்சிக்கு பெயர் வைத்துள்ளேன். எப்படியும் இந்த தேர்தலில் இல்லாவிடினும் அடுத்த தேர்தலில் போட்டியிடுவோம்.
இனிதான் தேர்தல் ஆணையத்தில் எல்லாம் பதிவு செய்ய வேண்டும். நிறைய வேலைகள் இருக்கின்றன. இருந்தாலும் கட்சி தொடங்குவதை முன்கூட்டியே சொல்கிறேன். விஜய்க்கும், பவர்ஸ்டாருக்கும் தான் போட்டி. எங்கள் வியூகங்கள், திட்டங்கள் குறித்து இனிதான் யோசிக்க வேண்டும். இந்த தேர்தலில் என்னுடைய ஆதரவு திமுகவுக்கு தான். ஸ்டாலின் தான் ஒரு மீண்டும் முதல்-அமைச்சர் ஆவார் என்றார். விஜய்க்கு எதிராக பவர் ஸ்டார் சீனிவாசன் அரசியலில் குதித்திருப்பது தவெகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நகைச்சுவை நடிகரான பவர் ஸ்டார் சீனிவாசன் ஏராளமான மோசடி வழக்குகளில் சிக்கி கைதாகியுள்ளார். பவர் ஸ்டாரும் அரசியலில் பல ரவுண்டுகள் அடித்துள்ளார். தமாகா, பாஜக, குடியரசு கட்சிகளில் அங்கம் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.