

சென்னை,
கோலிவுட்டில் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்தவர் பிரசாந்த். பின்னர் சில காரணங்களால் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். இவ்வாறு பல வருடமாக சினிமாவை விட்டு விலகி இருந்த நடிகர் பிரசாந்த், தற்போது கதாநாயகனாக நடித்து வெளியான படம் 'அந்தகன்'.
பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'அந்தாதூன்' படத்தின் ரீமேக்காக 'அந்தகன்' திரைப்படம் உருவானது. இந்த படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்தனர்.
இப்படம் கடந்த 9ம் தேதி வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில், அடுத்தகட்ட நகர்வு குறித்து நடிகர் பிரசாந்த் அப்டேட் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'ஆண்டுக்கு 4 படங்கள் நடிக்கலாம் என திட்டமிட்டுள்ளேன். குறிப்பிட்ட இயக்குனர்களுடன் என்றில்லை, அனைத்து இயக்குனர்களுடனும் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்', என்றார்