

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரவி மோகன். இவர் ஜெயம், தனி ஒருவன், பொன்னியின் செல்வன் உள்பட பல்வேறு படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார்.
இதனிடையே, கருத்து வேறுபாடு காரணமாக மனைவி ஆர்த்தியிஅமிருந்து விவாகரத்து வழங்கக்கோரி ரவி மோகன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இறுதி தீர்ப்பிற்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கடந்த சில நாட்களுக்குமுன் செய்தியாளர்களை சந்தித்த ரவி மோகன், மனைவி ஆர்த்தி மற்றும் அவரது மாமியாரான ஆர்த்தியின் தாயார் சுஜாதா, நடிகை குஷ்பு உள்ளிட்டோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தனது பிள்ளைகளை பார்க்க ஆர்த்தி தரப்பு அனுமதிக்கவில்லை என்றும், விவாகரத்து கிடைக்கும்வரை படங்களில் நடிக்கப்போவதில்லை என்றும் ரவி மோகன் தெரிவித்தார். மேலும், இதுவரை நடித்த படங்களையும் வெளியிடப்போவதில்லை என்றும் கூறினார். மனைவி, மாமியார் உள்ளிட்டோர் மீது நடிகர் ரவி மோகன் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசிய சம்பவம் தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நடிகர் ரவி மோகன் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளார். 41 நாட்கள் விரதமிருந்து ரவி மோகன் ஜூலை மாத தொடக்கத்தில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.