ஜீவனாம்சம் தொடர்பான வழக்கில் நடிகர் ரவிமோகனின் மனு தள்ளுபடி

ரவி மோகன் இடைக்கால ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என அவரது மனைவி ஆர்த்தி தொடர்ந்த வழக்கில் காலக்கெடுவை நீட்டிக்ககோரிய ரவியின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
ஜீவனாம்சம் தொடர்பான  வழக்கில் நடிகர் ரவிமோகனின் மனு தள்ளுபடி
Published on

சென்னை,

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியப்போவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து, திருமண பதிவை ரத்து செய்து, மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து வழங்கக்கோரி அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். ரவி மோகன் - ஆர்த்தி ரவி இடையேயான விவாகரத்து வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இறுதி தீர்ப்பு வரும் வரை இரு தரப்பினரும் அவதூறு அல்லது தனிப்பட்ட விமர்சனங்களில் ஈடுபடக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. சமீபத்தில் ரவிமோகனுனடான தொடர்பை முறித்துக் கொள்வதாக கெனிஷா அறிவித்திருந்தார் .

நடிகர் ரவி மோகன் கடந்த மே 16-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மூன்றெழுத்து நடிகை தான் தன் வாழ்க்கையை கெடுத்தார், தனது மகன்களை பார்க்க விடுவதில்லை என சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கு தொடர்பாக பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாது என இரு தரப்புக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கோர்ட் உத்தரவை மீறி ரவி மோகன் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியதாக ஆர்த்தி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்க்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கோரி பத்திரிகையில் ரவி மோகன் பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பத்திரிகையில் மன்னிப்பு கோரி அறிவிப்பு வெளியிட்ட ஆவணமும் ரவி மோகன் தரப்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆர்த்தி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில், ரவி மோகனுக்கு எதிராக ஏப்ரல் 2025 முதல் தனது குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் உட்பட எந்தவொரு இடைக்கால ஜீவனாம்சத்தையும் வழங்கவில்லை என புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் இடைக்கால ஜீவனாம்ச மனுவை விரைந்து விசாரணை நடத்தி முடிக்க சென்னை குடும்ப நல நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஆர்த்தி ரவி தாக்கல் செய்திருந்த இடைக்கால ஜீவனாம்ச மனுவை இரண்டு வாரத்துக்குள் விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

குடும்ப நல நீதிமன்றத்திற்கு விதிக்கப்பட்ட காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று ரவி மோகன் புதிதாக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், வழக்கு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. ஆர்த்தி ரவி சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி காலக்கெடுவை நீடிக்க கூடாது என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து குடும்ப நல நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com