“கொத்தடிமை” என விமர்சித்தவருக்கு நடிகர் சூரியின் பதிலடி


“கொத்தடிமை” என  விமர்சித்தவருக்கு நடிகர் சூரியின் பதிலடி
x

தன்னை விமர்சித்தவருக்கு தமிழனின் அடையாளமே யாரையும் இழிவுபடுத்தாமல் மரியாதையோடு பேசும் பண்பாடுதான் என்று நடிகர் சூரி பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளவர் நடிகர் சூரி. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’ படத்தில் சூரி நடித்துள்ளார். அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் ரிலீஸாவதில் தாமதம் நீடிக்கிறது.

இந்நிலையில் மதுரை பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட நடிகர் சூரி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு சால்வை அணிந்து மரியாதை செய்து,காளை சிற்பத்தை நினைவுப்பரிசாக வழங்கினார். பின்பு அவருடன், அமர்ந்து போட்டியை கண்டுகளித்தார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் ஒருவர், சூரியும் இனி ரூ.200 கொத்தடிமை என்று விமர்சித்தார்.

இதற்கு பதிலளித்த சூரி, “தம்பி, தமிழனின் அடையாளமே யாரையும் இழிவுபடுத்தாமல் மரியாதையோடு பேசும் பண்பாடுதான். கவனம் கிடைக்கிறது என்பதற்காக சொல்வதெல்லாம் உண்மையாகிவிடாது. மதிப்பு இருந்தா அதற்கேற்ற பொறுப்பும் இருக்கணும். ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள் கருத்து இல்லை அது வெறும் சத்தம். சினிமாவுல ஒரு படத்தின் பயணத்தை பணமும், அரசியலும், பேசுறவங்களும் தீர்மானிக்காது.இன்று சினிமாவில் கதை தான் ராஜா. அதை தீர்ப்பது சத்தம் போடுறவர்கள் அல்ல; அதை பார்க்கும் எல்லா தரப்பு மக்கள்தான். நல்லா இருந்தா அது தானாகவே நிலைக்கும்; இல்லன்னா எதுவுமே காப்பாற்ற முடியாது. அதுதான் நியாயம். அதுதான் உண்மை” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்திருந்தார்.

இதையடுத்து சூரியை விமர்சித்துப் போட்ட பதிவைப் பதிவிட்டிருந்தவரே நீக்கி சூரியிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். இதற்கு பதிலளித்த சூரி, “தம்பி. தன் தவறை உணர்ந்து அதை ஒத்துக்கொள்ளும் மனசு எப்போதும் மதிப்புக்கு உரியதுதான். வேடிக்கை என்ற பெயரில்கூட பிறரின் பெயர், படம் அல்லது நிழலை பயன்படுத்தி பிரச்சனை உருவாக்குவது சரியானது அல்ல. அது நமக்கும், அவர்களுக்கும் மதிப்பை கெடுக்கும். இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு இடமும் ஒரு காரணமும் உண்டு; அதை மறக்கும் சொற்களும் செயல்களும் ஏற்றுக்கொள்ள முடியாது” என பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story