‘சாவித்திரி வேடத்தில் நடிக்க தகுதி இல்லை’ கீர்த்தி சுரேசுக்கு நடிகை ஜமுனா எதிர்ப்பு

படத்தில் சாவித்திரியாக நடிப்பவருக்கு (கீர்த்தி சுரேஷ்) தெலுங்கு தெரியாது.
‘சாவித்திரி வேடத்தில் நடிக்க தகுதி இல்லை’ கீர்த்தி சுரேசுக்கு நடிகை ஜமுனா எதிர்ப்பு
Published on

மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்றும் சினிமா படமாக தயாராகிறது. இதில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேசும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடிக்கின்றனர். நாக் அஸ்வின் இயக்குகிறார். சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதற்கு பழம்பெரும் நடிகை ஜமுனா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

நான் 200 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறேன். சாவித்திரியோடு நடித்தவர்களில் நான் மட்டும்தான் உயிருடன் இருக்கிறேன். சாவித்திரியை பற்றி எனக்குத்தான் நிறைய விஷயங்கள் தெரியும். ஆனால் என்னிடம் எதுவும் கேட்காமல் அவரது வாழ்க்கையை படமாக்குவது வேதனையாக இருக்கிறது.

இந்த படத்தில் சாவித்திரியாக நடிப்பவருக்கு (கீர்த்தி சுரேஷ்) தெலுங்கு தெரியாது. மொழி தெரியாத அவரால் சாவித்திரி கதாபாத்திரத்துக்கு திரையில் எப்படி உயிர் கொடுக்க முடியும்? இப்போதுள்ள நடிகைகள் அரைகுறை ஆடைகளில் நடிக்கிறார்கள். ஆனால் எங்கள் காலத்தில் அப்படி இல்லை.

நானும், சாவித்திரியும் சேர்ந்து நடித்து இருக்கிறோம். எனக்கு மகன் பிறந்தபோது தொட்டிலில் போடும் நிகழ்ச்சிக்கு அவர் வந்து இருந்தார். அப்போது கணவர் அமைவது அவரவர் புண்ணியம். உனக்கு நல்ல கணவர் அமைந்து இருக்கிறார். ஆனால் ஜெமினி கணேசன் என்னை மோசம் செய்துவிட்டார் என்று சொல்லி என்னை கட்டிப்பிடித்து அழுதார்.

நாங்கள் தடுத்தும் கேட்காமல் நீதானே விரும்பி அவரை மணந்தாய் என்று நான் ஆறுதல் சொன்னேன். சாவித்திரிக்கு சென்னையில் 3 பங்களா வீடுகள் இருந்தன. அவரை மாதிரி சினிமாவில் எந்த நடிகையும் சம்பாதிக்கவில்லை. வீட்டில் நீச்சல் குளம் கட்டி இருந்தார். மைசூரில் இருந்து சந்தன கட்டைகளை வரவழைத்து பூஜை அறையை உருவாக்கி இருந்தார்.

கொடைக்கானலிலும் வீடு இருந்தது. அந்த காலத்திலேயே சென்னையில் உள்ள அவரது ஒரு வீடு ரூ.1 கோடி விலைக்கு போகும். இரண்டு வீடுகளை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கலாமே என்று அவரிடம் கூறினேன். ஆனால் அந்த சொத்துகள் அனைத்தும் எப்படியோ கரைந்து போனது. கடைசி காலத்தில் மதுவுக்கு அடிமையாகி உடல் மெலிந்து துரும்பாகி கோமாவிலேயே இறந்துபோனார். இப்படி அவரைப் பற்றி நிறைய விஷயங்கள் எனக்கு தெரியும். என்னிடம் கேட்காமல் எப்படி படத்தை சிறப்பாக எடுக்க முடியும்? இவ்வாறு ஜமுனா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com