போதைப்பொருள் வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகை ராகிணி திவேதி

போதைப்பொருள் வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்து உள்ள நிலையில், நடிகை ராகிணி திவேதி நேற்று இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கண்ணீர்விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது நடிகை ராகிணி திவேதி கண்ணீர் விட்டு அழுத காட்சி.
ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது நடிகை ராகிணி திவேதி கண்ணீர் விட்டு அழுத காட்சி.
Published on

ராகிணி திவேதி கைது

போதைப்பொருட்களை பயன்படுத்தியது மற்றும் அதனை விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக கன்னட நடிகை ராகிணி திவேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் தனக்கு ஜாமீன் கேட்டு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டு, கர்நாடக ஐகோர்ட்டில் விண்ணப்பம் செய்தார்.

அங்கு அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இறுதியாக ராகிணிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதனால் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் கோவில்கள், மசூதிகளில் ராகிணி சிறப்பு பூஜைகள் நடத்தி வருகிறார். சமூக இணையதளங்களில் அதிக ஆர்வம் கொண்ட ராகிணி இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகிறார்.

ரசிகர்களுடன் கலந்துரையாடல்

இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் நேற்று முதல் முறையாக இன்ஸ்டாகிராம் மூலம் தனது ரசிகர்களுடன் ராகிணி கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் சிலர் சிறை வாழ்க்கை குறித்து அவரிடம் கேட்டனர்.

அப்போது அவர் கூறியதாவது:-

எனக்கு மகிழ்ச்சி தான்

சில நேரங்களில் காலம் நம்மை சோதனைக்கு ஆளாக்கும். நாம் எதற்காக சோதிக்கப்படுகிறோம் என்பதும் நமக்கு தெரியாது. அத்தகைய சூழ்நிலையில் நாம் கடினமாகி விடுவோம். நாம் சரியாக இருக்கும்போது நம்மை பற்றி பேசுபவர்களை பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை. எனக்கு உடல்நல பாதிப்பு உள்ளது. அதில் இருந்து நான் மெதுவாக குணம் அடைந்து வருகிறேன்.

நான் உங்களிடம் நிறைய பேச வேண்டி உள்ளது. ஆனால் எதை பற்றி பேசுவது என்று தெரியவில்லை. நான் என் வாழ்க்கையில் நிறைய போராட்டங்களை கண்டு உள்ளேன். 12 வருடம் திரைத்துறையில் பணியாற்றி வருகிறேன். நிறைய பேருக்கு என்னால் முயன்ற உதவிகளை செய்து உள்ளேன். சமூக நலனிலும் அக்கறை காட்டி வருகிறேன்.

சிறைக்கு சென்றதும் அவதூறு

கடந்த சில மாதங்களாக அனுபவித்தது போல என் வாழ்க்கையில் நான் கஷ்டத்தை அனுபவிக்கவில்லை. அந்த கடினமான காலகட்டத்தில் எனது குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக இருந்தனர்.

ரசிகர்களும் ஆதரவு அளித்தனர். நான் சிறைக்கு சென்றதும் என்னை பற்றி நிறைய பேர் அவதூறாக விமர்சித்தனர். என்னை விமர்சிக்கும் போது என்னால் சிலருக்கு சந்தோஷம் ஏற்படுகிறது. இதுவும் எனக்கு மகிழ்ச்சி தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராகிணி பேசும்போது அடிக்கடி கண்ணீர் விட்டு அழுதார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கண்ணீர்விட்டு அழுத ராகிணியை அவரது ரசிகர்கள் சமாதானப்படுத்தி ஆறுதல் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com