நடிகை சோனாலியின் பெயர், உதவியாளரின் மனைவி என ஆவணங்களில் பதிவு

நடிகை சோனாலி போகத் சொத்துக்காக படுகொலை என்ற குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில் மற்றொரு தகவல் வெளிவந்துள்ளது.
நடிகை சோனாலியின் பெயர், உதவியாளரின் மனைவி என ஆவணங்களில் பதிவு
Published on

குர்காவன்,

பா.ஜ.க. முக்கிய பிரமுகர், டிக்டாக் மற்றும் பிக்பாஸ் பிரபலம் உள்பட பல்வேறு வகையில் மக்களை சென்றடைந்திருந்த அரியானாவை சேர்ந்த நடிகை சோனாலி போகத் கடந்த 22-ந்தேதி கோவாவுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் மர்ம மரணம் அடைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

கோவாவில் 24-ந்தேதி படப்பிடிப்புக்கு செல்ல வேண்டிய நேரத்தில், அதற்கு 2 நாட்கள் முன்பே அதுவும் 2 நாட்களுக்கு மட்டுமே ஓட்டல் அறையில் முன்பதிவு செய்துள்ளனர் என சோனாலியின் சகோதரர் சந்தேகம் கிளப்பினார். அவரை திட்டமிட்டே கோவாவுக்கு அழைத்து சென்றுள்ளனர் என்று குற்றச்சாட்டையும் முன் வைத்துள்ளார்.

இந்த வழக்கில் சோனாலியின் உதவியாளரான சுதீர் சங்வான் மற்றும் உடன் சென்ற மற்றொரு நபரான சுக்வீந்தர் சிங் வாசி ஆகியோர் மீது நேரடியான குற்றச்சாட்டை சோனாலியின் குடும்பத்தினர் சுமத்தியுள்ளனர்.

முதலில், அவர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என தகவல்கள் வெளிவந்தன. எனினும், சந்தேக மரணம் என குடும்பத்தினர் தொடர்ந்து கூறி வந்த நிலையில், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

இதனால் வழக்கு, இயற்கைக்கு மாறான மரணம் என மாற்றி பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரமடைந்தது. சோனாலி தனது தாயாரிடம், சங்வான் போதை மருந்து கலந்த உணவை தனக்கு கொடுத்து விட்டார்.

இதன் பின்பு பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டு மிரட்டுகிறார். அதனை சமூக ஊடகத்தில் வெளியிட்டு வைரலாக்கி விடுவேன் என்றும் அச்சுறுத்துகிறார் என கூறியுள்ளார் என சோனாலியின் சகோதரர் ரிங்கு டாக்கா அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சோனாலியின் அரசியல் மற்றும் நடிப்பு தொழிலை அழித்து விடுவேன் என சங்வான் மிரட்டி உள்ளார். சோனாலியின் மொபைல் போன்கள், சொத்து பதிவுகள், ஏ.டி.எம். அட்டைகள் மற்றும் வீட்டு சாவிகளையும் பறித்து வைத்து கொண்டு மிரட்டுகிறார் என ரிங்கு குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

இதேபோன்று சோனாலியின் மருமகனான மொனீந்தர் போகத் கூறும்போது, எங்களுடைய சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்து, படுகொலை செய்துள்ளனர் என்பது நிச்சயம் என கூறியுள்ளார். இது, வழக்கின் போக்கில் தீவிரம் ஏற்படுத்தியது.

இந்நிலையில், அரியானாவில் குர்காவன் நகரில் செக்டார் 102-ல் சோனாலி தங்கியிருந்த வாடகை குடியிருப்புக்கும் சென்று போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில், குர்காவன் கிரீன்ஸ் என்ற குடியிருப்பின் உரிமையாளரான கிருஷ்ணகாந்த் திவாரியிடம் நடந்த விசாரணையில், சில விசயங்கள் கிடைத்துள்ளன.

அதில் வாடகைக்கு தங்கியிருப்பதற்கான ஆவணங்களில், சோனாலி போகத்தின் பெயரானது, அவரது உதவியாளரின் மனைவி என பதிவு செய்யப்பட்டு இருந்துள்ளது அவரது மரண வழக்கில் புதிய திருப்பம் ஏற்படுத்தி உள்ளது.

அந்த பிளாட்டிலேயே வசித்த சோனாலி, தனது உதவியாளருடன் கோவாவுக்கு புறப்படுவதற்கு முன்பு, பிளாட்டுக்கு சென்று அதன்பின் வாடகை காரில் புறப்பட்டு விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், வாடகை குடியிருப்பின் ஆவணத்தில், உதவியாளரின் மனைவி சோனாலி போகத் என பெயர் பதிவிடப்பட்டு இருப்பது சொத்துக்காக படுகொலை நடந்திருக்க கூடும் என்ற சந்தேகத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com