"அதாண்டா இதாண்டா".. அருணாச்சலம் படத்திற்காக எழுதப்பட்டு படத்தில் வராத பாட்டு.. வைரமுத்து பகிர்வு

எஸ்.பி.பி குரலில், வைரமுத்து வரிகளில் வெளியான இந்த பாடல் இன்றுவரை “எவர்க்ரீன் ஹிட்” பாடலாக திகழ்கிறது.
"அதாண்டா இதாண்டா".. அருணாச்சலம் படத்திற்காக எழுதப்பட்டு படத்தில் வராத பாட்டு.. வைரமுத்து பகிர்வு
Published on

சென்னை,

1997 ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் அருணாச்சலம். இந்த படத்தில் இடம்பெற்ற “அதாண்டா இதாண்டா” பாடல், இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. இந்தப் பாடலுக்கு தேவா இசையமைக்க வைரமுத்து பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடலில் இடம்பெற்ற “அதாண்டா இதாண்டா” என்ற வரி, அக்காலத்தில் வைரலாகி, இன்றும் சமூக வலைதளங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலில் பாடப்பட்ட இந்த பாடல் இன்றுவரை “எவர்க்ரீன் ஹிட்” பாடலாக திகழ்கிறது.

இந்த நிலையில், “அதாண்டா இதாண்டா” பாடல் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கவிஞர் வைரமுத்து, இந்தப் பாடலுக்காக தாம் எழுதியிருந்த மாற்றுப் பல்லவி மற்றும் சரணங்களை, தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

சூப்பர் ஸ்டார்

ரஜினிகாந்த் நடித்த

அருணாசலம் படத்தில்

இடம்பெற்ற

'அதான்டா இதான்டா'

பாடலுக்காக எழுதப்பட்டுப்

படத்தில் இடம்பெறாத

மாற்றுப் பல்லவியும் சரணங்களும்

ஆயிரத்தொரு பாடல்கள் தொகுப்பில்

இடம்பெறுகின்றன

இந்த வரிகளை

ரசிகர்கள் அதே மெட்டில்

பாடிப் பார்க்கலாம்;

பரவசம் கொள்ளலாம்

பல்லவி

அன்புள்ள அண்ணன்டா

அருணாசலம் நான்தாண்டா

சாதிபேதம் இல்லாம

சகலருக்கும் சொந்தம்டா

ஆண்டவன் நடத்திடுவான்டா

அருணாசலம் நடந்திடுவான்டா

நான் எந்த நாளும்

எளிமையான ஆளடா - அட

ஏழை வீட்டு உப்புக் கல்லு நானடா

சரணம் 1

எல்லா மனிதனுக்கும்

ஓராற்றல் உண்டு – அதை

நல்லா வளர்த்துவிடு

அடையாளம் கண்டு – அட

உதவாத பயலென்று

எவனுமில்லை இன்று – சிறு

வேப்பம் பூவானாலும்

தேனுண்ணும் வண்டு

பாம்புகடிச்சு இங்கே

பொழச்சவனும் உண்டு – தன்

செருப்புக் கடிச்சு இங்கே

செத்தவனும் உண்டு – அட

நாளை என்னாகும் என்ற

கவலைகளை வென்று – நீ

இன்றே சுகம் கண்டு

வாழ்வதுதான் நன்று

போதிக்கும் மனிதர்கள்

சாதிப்பது இல்லையடா

சாதிக்கும் மனிதர்கள்

போதிப்பது இல்லையடா

உழைக்கும் மனிதன்

அழைக்கும்போது

தெய்வம் வருமடா

நெற்றி வேர்வை

நிலத்தில் சிந்தி

வெற்றி வெற்றி கொள்ளடா

சரணம் 2

கறையேதும் இல்லாத

நிலவெங்கே சொல்லு? – சிறு

நுரை கூட இல்லாத

நதி எங்கே சொல்லு – அட

சதுரத்தில் முட்டையிடும்

பறவை எதுசொல்லு – மிகச்

சரியாக வாழ்கின்ற மனிதன்

யார் சொல்லு?

ரோஜாச் செடியென்றால்

அதிலுண்டு முள்ளு – நீ

முள்ளோடு மோதாமல்

ரோஜாவைக் கிள்ளு – அட

அறியாத பிழை என்றால்

அதை விட்டுத் தள்ளு – சிறு

குறை நீக்கி நிறை கண்டு

நெறியோடு நில்லு

இளமையில் உழைப்பவன்

முதுமையில் சிரிக்கிறான்

இளமையில் படுத்தவன்

முதுமையில் அழுகிறான்

விதைக்கு வைத்ததைச்

சமைத்து உண்பவன்

மிகவும் மூடனடா

மழைக்கு முந்தியே

கலப்பை செய்பவன்

எவனோ அவனே சூரன்டா

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com