

நடிகர் விக்ரம் தன் மகன் துருவ் நடித்த ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சியான் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், பின்னர் தனது தந்தை விக்ரமுடன் இணைந்து ‘மகான்’ திரைப்படத்தில் நடித்தார்.
சமீபத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பைசன்’ திரைப்படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருந்தார். கபடி வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், உலகளவில் ரூ.70 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனையும் படைத்தது. குறிப்பாக, துருவ் விக்ரமின் நடிப்பு ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் பாராட்டைப் பெற்றது.
தற்போது துருவ் விக்ரம் தனது 4-வது திரைப்படமான ‘ஜாக்கி’-ல் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர்கள் பிருத்வி பாண்டியராஜ், சாய் தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். துருவ் விக்ரமும், மைத்ரி மூவி மேக்கர்ஸும் முதல் முறையாக இணைவதால், இந்த படம் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
விக்ரம் மகன் துருவ், ‘ஆதித்ய வர்மா’ என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து வெற்றிகரமாக ஓடி வசூல் அள்ளிய ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் பதிப்பாக உருவானது. ‘ஆதித்ய வர்மா’ படத்தில் துருவ்க்கு ஜோடியாக பனித்தா சந்து நடித்துள்ளார். பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அர்ஜுன் ரெட்டி இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவிடம் உதவியாளராக பணியாற்றிய கிரிசய்யா இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, அர்ஜூன் ரெட்டி புகழ் ரதான் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், நடிகர் விக்ரம் இன்ஸ்டாகிராமில் ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தின் படப்பிடிப்புப் புகைப்படங்களைப் பகிர்ந்து, “ஒரு அப்பா. ஒரு மகன். அவனின் முதல் திரைப்படம். கேமராவுக்குப் பின் மறக்க முடியாத நாள்கள். 7 ஆண்டுகளைக் கடந்தது ஆதித்ய வர்மா” எனத் தெரிவித்துள்ளார்.