

மும்பை,
பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கிய ’துரந்தர்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு எதிர்பார்ப்பின்றி வெளியான முதல் பாகம் ரூ.1,00 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, குறுகிய இடைவெளியில் வெளியான ’துரந்தர் 2’ தற்போது எதிர்பார்ப்புகளை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது. வெளியான இரண்டு நாட்களில் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்து, பாக்ஸ் ஆபிஸில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில், அடுத்ததாக ‘துரந்தர் 3’ வெளியாகும் என தகவல்கள் பரவிய நிலையில், இயக்குநர் ஆதித்யா தார் தனது கனவு திட்டமான ’அஸ்வத்தாமா’ படத்தை தொடங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாகவே திட்டமிடப்பட்டிருந்த இந்த படம், அதிக பட்ஜெட் காரணமாக தாமதமானது. தற்போது ’துரந்தர்’ வெற்றியின் பின்னர், இந்த படத்தை மிகப்பெரிய அளவில் உருவாக்க திட்டமிட்டுள்ளார். இப்படத்தின் பட்ஜெட் ரூ.800 கோடியை தாண்டி, ரூ.1,000 கோடி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்தில் ஹீரோவாக மீண்டும் ரன்வீர் சிங் நடிக்க வாய்ப்பு இருப்பதாக பாலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. சிறிய பட்ஜெட்டில் மிகப்பெரிய வெற்றி கொடுத்த ஆதித்யா தரர், இந்த பிரம்மாண்ட திட்டத்தில் என்ன சாதனை படைக்கப் போகிறார் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.