

சென்னை,
'சதுரங்க வேட்டை' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான எச். வினோத், தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதைத் தொடர்ந்து 'தீரன் அதிகாரம் ஒன்று', 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை', 'துணிவு' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்தார்.
தற்போது நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தை இயக்கியுள்ள எச். வினோத், அடுத்ததாக தயாரிப்பாளராகவும் தனது புதிய பயணத்தை தொடங்கியுள்ளார்.
எச். வினோத், 'ஆஸ்பையர் உபுண்டு பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக 'ஆல்மோஸ்ட் நல்லவன்' திரைப்படம் உருவாக உள்ளது. 'பேஷன் ஸ்டுடியோஸ்' நிறுவனமும் இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கிறது.
'பிக் பாஸ் தமிழ் சீசன் 5' மற்றும் 'குக் வித் கோமாளி சீசன் 6' மூலம் பிரபலமான ராஜு ஜெயமோகன், இந்தப் படத்தை இயக்குவதுடன் கதாநாயகனாகவும் நடிக்கிறார். நடிகை துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்க, சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தரமான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு புதுமுக இசையமைப்பாளர் பாக்ஸ்ன் இசையமைக்கிறார். டி.எஸ். பிரசன்னா ஒளிப்பதிவை மேற்கொள்ள, ஆர். கோவிந்தராஜ் படத்தொகுப்புப் பணிகளை கவனிக்கிறார்.
இந்நிலையில், 'ஆல்மோஸ்ட் நல்லவன்' திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. படத்தின் கதைக்களம் மற்றும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.