'ஆண்டவன்' சினிமா விமர்சனம்


ஆண்டவன் சினிமா விமர்சனம்
x

இயக்குனர் வில்லிதிருக்கண்ணன் இயக்கிய 'ஆண்டவன்' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சென்னை,

சென்னையில் ஐ.டி. ஊழியராக பணியாற்றும் மகேஷ், ஒருகட்டத்தில் வேலையை உதறி சொந்த கிராமத்துக்கு வருகிறார். தனது யூடியூப் சேனலில் மக்கள் குறைகளை பற்றி பேசி வருகிறார். அந்தவகையில் ஒரு புளிய மரத்தடியில் வாழ்க்கையை நடத்தும் வயதான தம்பதியின் பிரச்சினைகளை வீடியோவாக எடுத்து வெளியிடுகிறார்.

இதை கேள்விப்பட்ட கலெக்டர் பாக்யராஜ், அந்த வயதான தம்பதிக்கு சொந்த வீடு கட்டி தருகிறார். கிராமத்துக்கும் பல திட்டங்களை அறிவிக்கிறார். இதையடுத்து அந்த ஊரில் வசிக்கும் முத்து செல்வம் என்பவருக்கும், மகேசுக்கும் பிரச்சினை வெடிக்கிறது. அதன்பிறகு என்ன ஆனது? என்பதே படத்தின் கதை.

கலெக்டராக வரும் பாக்யராஜ் தனக்கே உரிய அனுபவ நடிப்பை கொடுத்து அசத்துகிறார். அவ்வப்போது அவர் அடிக்கும் காமெடிகளும் கவனம் ஈர்க்கிறது. நவநாகரிக இளைஞராக அறிமுகமாகும் மகேஷ், மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும்போது அக்கறையான நடிப்பை வழங்கி இருக்கிறார். கதாநாயகியாக வைஷ்ணவி நடிப்பில் அழகு.

வில்லனாக முத்துச்செல்வம் மிரட்டுகிறார். ஆதிராவின் குணச்சித்திர நடிப்பு நினைவில் நிற்கிறது. கஞ்சா கருப்பு, முத்துக்காளை, ஹலோ கந்தசாமி, லட்சுமணன், உக்கிரபாண்டியன் ஆகியோரின் காமெடிகள் ஆங்காங்கே சிரிப்பை வரவழைக்கிறது. மதுபாலனின் ஒளிப்பதிவு, கிராமத்து வாழ்க்கையை கண்முன் நிறுத்துகிறது. சார்லஸ் தனா பின்னணி இசை, படத்துக்கு விறுவிறுப்பு கூட்டுகிறது.

எதார்த்தமான கதைக்களம் பலம். பிற்பாதியில் வேகம் குறைவு. திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். நகரத்தில் வசித்தாலும், கிராமத்தையும் நேசிக்க வேண்டும் என்பதை, எதார்த்த காட்சிகளுடன் கொடுத்து கவனம் ஈர்த்துள்ளார், இயக்குனர் வில்லிதிருக்கண்ணன்.

ஆண்டவன் - காப்பாற்றுபவன்.

1 More update

Next Story