

சென்னை,
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, சன் குழும ஊழியர்களுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டுள்ள சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத் ரவிச்சந்தர். இவரும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைமைச் செயல் அதிகாரியுமான காவ்யா மாறனும் கடந்த நவம்பர் 11-ம் தேதி கிரீஸ் நாட்டில் திருமணம் செய்து கொண்டனர். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் இவர்களது திருமணம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் கடந்த நவம்பர் 21-ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், திருமணக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சன் குழும ஊழியர்களுக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஊழியர்களுக்கு திருமண அழைப்பிதழ், சாக்லேட்டுகள் மற்றும் தங்க மோதிரம் அடங்கிய பரிசுப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. ஊழியர் ஒருவர் பரிசுப் பெட்டியைத் திறந்து பார்த்தபோது, அதில் தங்க மோதிரம் இருந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தார். இதுதொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், மற்றொரு ஊழியர் இந்தப் பரிசு குறித்து மகிழ்ச்சியுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள திருமண அழைப்பிதழில், வரும் நவம்பர் 25-ம் தேதி சிறப்பு மதிய விருந்து நடைபெற இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, திருமணக் கொண்டாட்டத்தில் தங்களது ஊழியர்களையும் இணைத்துக் கொள்ளும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்தப் பரிசு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. திருமணத்தை முன்னிட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் பரிசு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.