

சென்னை,
தாய் கிழவி படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், ராதிகா சரத்குமார் நடித்துள்ள இப்படம் வருகிற 27-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் விழாவில் பல சுவாரஸ்ய தருணங்கள் இடம்பெற்றன.
விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், “சூரி அண்ணே லவ்யூ… நம்ம இரண்டு பேரும் 30 வருடங்களுக்கு பிறகு ராதிகா, ஸ்ரீபிரியா மாதிரி இருக்கணும்” என்று கூறினார். அதற்கு உடனே ராதிகா சரத்குமார் நகைச்சுவையாக, “அப்படின்னா நீங்க இருவரும் பெண்ணாக மாறப் போறீங்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், “நான் நடிப்பைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தேன். ‘லேடீஸ்’ ஆக நாங்க மாறினாலும் பார்க்க யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நான் ஏற்கனவே ஒரு படத்தில் பெண்ணாக மாறி நடித்திருக்கிறேன். சூரி அண்ணனையும் அதே தோற்றத்தில் பார்க்கணும்” என்று கலகலப்பாக கூறினார்.
இந்த நகைச்சுவை உரையாடல் விழாவிற்கு மேலும் உற்சாகத்தை கூட்டியது. நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், ஸ்ரீபிரியா, சிங்கம்புலி, முனிஷ்காந்த் உள்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.