அர்ஜுன் தாஸின் “கான் சிட்டி” படத்தின் டிரெய்லர் வெளியானது

ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான்சிட்டி’ படம் வரும் 26ம் தேதி வெளியாகவுள்ளது.
அர்ஜுன் தாஸின் “கான் சிட்டி” படத்தின் டிரெய்லர் வெளியானது
Published on

அர்ஜுன் தாஸ் நடிப்பில் ‘கான் சிட்டி’

மாஸ்டர், கைதி, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அர்ஜுன் தாஸ் . அதன் பிறகு ஹீரோவாக உருவெடுத்த அவர், அநீதி, ரசவாதி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார். அர்ஜுன் தாஸ் அறிமுக இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் ‘கான்சிட்டி’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் அன்னா பென், வடிவுக்கரசி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். நகரத்தில் வாழும் நடுத்தர குடும்பத்தின் உணர்வுகளையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் மையமாகக் கொண்ட கதைக்களத்தில் படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகிற 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது.

கவனத்தை ஈர்த்த டீசர்

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் கவனத்தை ஈர்த்தது. நகரத்தில் வசிக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தினரின் உணர்ச்சிகளை விவரிக்கும் கதைக்களம் என்றும், நிச்சயம் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் என்றும் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. சமீபத்தில்‘கான்சிட்டி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது.

படம் முடிந்த பிறகும் நினைவில் நிற்கும்

படத்தை முன்னதாக பார்த்த தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் தனது சமூக வலைதளப் பதிவில், “‘கான் சிட்டி’ ஒரு விறுவிறுப்பான திரையனுபவத்தை வழங்குகிறது. மேலும், படம் முடிந்த பிறகும் அதன் தாக்கம் மனதில் நீடிக்கும். சிறப்பான கதை சொல்லலும் தரமான உருவாக்கமும் இப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமாக மாற்றியுள்ளது. எப்போதும் உள்ளடக்கம்தான் ராஜா என்பதை ‘கான் சிட்டி’ மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் ஒரு திறமையான படைப்பாளர். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்று பாராட்டியுள்ளார். இந்த பாராட்டு பதிவு ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அர்ஜுன் தாஸின் ‘கான்சிட்டி’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் வரும் 26ம் தேதி வெளியாகவுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com