

பெங்களூரு,
நடிகர் பிரகாஷ் ராஜ் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமான நடிகராக திகழ்கிறார். பல மொழிகளில் சரளமாக பேசும் திறன் கொண்ட அவர், நான்கு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த புகாரைத் தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள 48-வது கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பிரகாஷ் ராஜுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர் நேரில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
இதையடுத்து, பிரகாஷ் ராஜ் நேற்று பெங்களூரு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது, அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடிவாரண்டை திரும்பப் பெறக் கோரி அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை பரிசீலித்த நீதிமன்றம், பிரகாஷ் ராஜுக்கு எதிரான பிடிவாரண்டை திரும்பப் பெற்றதுடன், அவருக்கு முன்ஜாமீனும் வழங்கியது. மேலும், ரூ.4,000 ரொக்க உத்தரவாதம் செலுத்திய பின்னர் அவர் நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
பிரகாஷ் ராஜுக்கு எதிராக எழுந்துள்ள வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான புகார் குறித்து வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணையில் இந்த விவகாரம் குறித்து மேலும் தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.