

சென்னை,
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா மற்றும் திரிஷா நடித்துள்ள 'கருப்பு' திரைப்படம் கடந்த மாதம் 15-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. நீதிமன்றங்களில் நடைபெறும் அநீதிகளை எதிர்த்து கருப்புசாமி களமிறங்குவது போன்ற வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
வெளியான முதல் நாளிலிருந்தே நேர்மறையான விமர்சனங்களையும், ரசிகர்களின் ஆதரவையும் பெற்ற 'கருப்பு' திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது. தற்போது இந்த படம் உலகளவில் ரூ.300 கோடி வசூலை கடந்துள்ளது.
இந்த நிலையில், படத்தின் எடிட்டரான கலைவாணன் சமீபத்திய பேட்டியில், படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “படத்தில் இருந்து எந்தவொரு நீண்ட காட்சியும் நீக்கப்படவில்லை. சில கௌரவத் தோற்றங்கள் மற்றும் துணைக் கதாபாத்திரங்கள் இடம்பெற்ற குறுகிய காட்சிகள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த நேரம் 20 முதல் 30 நொடிகள் வரைதான் இருக்கும்” என்றார்.
மேலும், ஆர்யாவின் கௌரவத் தோற்றம், இரட்டை மருத்துவர் சகோதரர்கள் இடம்பெறும் மெட்ரோ காட்சி மற்றும் ‘தி கோட்’ ஜீவா தோன்றும் காட்சி ஆகியவை படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். “நீக்கப்பட்ட காட்சிகளில் ஆர்யா சாரின் காட்சிதான் மிக நீளமானது. அந்த காட்சி விரைவில் ‘Deleted Scene’ ஆக தனியாக வெளியிடப்படும்” என்றும் கலைவாணன் கூறியுள்ளார். இந்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஆர்யாவின் நீக்கப்பட்ட காட்சியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.