

ஹரிஷ் வியாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஓம் கா ஹரி’ என்ற இந்தி திரைப்படத்தில் பாடகி ஆஷா போஸ்லே பாடிய ‘ஆ மேரி ஜிந்தகி, டு சுபி ஹாய் கஹாந்’ என்ற பாடல் அவரது பிறந்தநாளான செப்டம்பர் 8ஆம் தேதி வெளியாகவுள்ளது
திரைப்பட பின்னணி பாடகி ஆஷா போஸ்லே (92) மாரடைப்பு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 12ம் தேதி காலமானார்.
1943-ல் தனது இசை பயணத்தை தொடங்கிய ஆஷா போஸ்லே, தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி என பல்வேறு மொழிகளில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.தாதாசாகேப் பால்கே விருது, பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார்.
இந்த நிலையில், ஹரிஷ் வியாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஓம் கா ஹரி’ என்ற இந்தி திரைப்படத்தில் பாடகி ஆஷா போஸ்லே ‘ஆ மேரி ஜிந்தகி, டு சுபி ஹாய் கஹாந்’ என்ற பாடலை கடைசியாக பாடியிருந்தார். இந்தப் பாடல் வரும் செப்டம்பர் 8ஆம் தேதி அவரது பிறந்த நாளான்று வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் பாடல் கடந்த 2023ல் ஆஷா போஸ்லே குரலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆஷா போஸ்லேவின் திரை பங்களிப்பு, இசை பயணம், அவரது பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில் நினைவு மியூசிக் வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உருவாக்கி வருகிறார். இதில் ஷாருக்கான், சல்மான்கானை தொடர்ந்து ரஜினியும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.