விஜய் சேதுபதி படத்தை தயாரிக்கும் அட்லீ - பிரியா அட்லீ

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
விஜய் சேதுபதி படத்தை தயாரிக்கும் அட்லீ - பிரியா அட்லீ
Published on

சென்னை,

தமிழ் திரையுலகில் இருந்து பாலிவுட் வரை முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீ, தற்போது இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக தனது பயணத்தை தொடங்கிய அவர், ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே வெற்றி பெற்றதை தொடர்ந்து, நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை வழங்கினார்.

தமிழில் தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்த அட்லீ, 2023-ம் ஆண்டு பாலிவுட்டிலும் தனது முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை பதிவு செய்தார். ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் வெளியான ‘ஜவான்’ திரைப்படம் உலகளவில் ரூ.1,100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.

தற்போது அட்லீ, நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து ‘ராக்கா’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தீபிகா படுகோனே, அனுஷ்கா ஷர்மா, மிருணாள் தாக்கூர் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா அட்லீ இணைந்து நடத்தும் ‘A for Apple’ தயாரிப்பு நிறுவனம் மூலம் நடிகர் விஜய் சேதுபதியின் புதிய திரைப்படம் தயாரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதற்கு முன்னர், அட்லீ இயக்கிய ‘ஜவான்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com