‘திருட்டுத்தனத்தை தவிருங்கள்’... ஜன நாயகனுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ஆதரவு குரல்

ஜன நாயகன் படத்திற்கு விரைவில் சென்சார் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
‘திருட்டுத்தனத்தை தவிருங்கள்’... ஜன நாயகனுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ஆதரவு குரல்
Published on

சென்னை,

நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய், 'ஜன நாயகன்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை கே.வி.என். புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்துக்கு தணிக்கை சான்று கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை வாரிய குழுவினர், மதம் மற்றும் பாதுகாப்பு படை தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரை செய்தனர்.

நீண்ட போராட்டத்திற்கு பின் 'ஜன நாயகன்' படத்தை மறுதணிக்கை செய்ய தணிக்கை வாரியத்திற்கு படத் தயாரிப்பு நிறுவனம் படத்தை அனுப்பியது. விரைவில் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் கடைசிப் படமான 'ஜன நாயகன்' பொங்கலுக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்சார் பிரச்சினை காரணமாக நீதிமன்றம் வரை சென்று தள்ளிப்போனது.

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவடைந்தவுடன் மே இரண்டாவது வாரத்தில் ஜன நாயகன் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று மாலை ஜன நாயகன் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக மர்ம நபர்களால் வெளியிடப்பட்டது. இன்று அதிகாலை 3 மணிநேரம் கொண்ட முழு படமும் இணையத்தில் வெளியானது. இதனால் படத் தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவினரும், ரசிகர்களும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில், ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “ஒவ்வொரு திரைப்படமும் நூற்றுக்கணக்கான மக்களின் பேரார்வம். இரத்தம் மற்றும் வியர்வையால் உருவாக்கப்படுகிறது; தயவுசெய்து திருட்டுத்தனத்தை தவிருங்கள். திரையரங்குகளில் வெளியாகும் வரை காத்திருந்து, அங்கே சென்று பாருங்கள். இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

திறமையாளர்களை மதியுங்கள்... கடின உழைப்பை மதியுங்கள்... சினிமா துறையை மதியுங்கள்...” என்று தெர்வித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com